பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 301


     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     கிழக்கு நோக்கிய திருக்கோயில். எதிரில் தீர்த்தம். விசாலமான
பிராகாரம். வாயிலைக் கடந்ததும் நந்தி பலிபீடம். பிராகாரத்தில் சித்தி
விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
மகாமண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இம்மண்டபத்தில்
சனி, சூரியன், பைரவர் சந்நிதிகளும் உள்ளன. அம்பாளைத் தொழுது
வரும்போது பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சி தந்த
மூர்த்தி உள்ளார்.

     அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம். வாயிலைக் கடந்து
உட்சென்றால் மூலமூர்த்தியைத் தரிசிக்கலாம். விநாயகர், முருகன், வள்ளி,
தெய்வயானை, சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன்,
துர்க்கை, அஸ்திரதேவர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.

     மிகப் பழமையான இத்திருக்கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களாக
நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், துர்க்கை உள்ளனர்.
நாடொறும் மூன்று கால பூஜைகள். இவை தவிர நடராசர் அபிஷேகங்கள்,
நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை, தீபாவளி, தனுர்மாத
வழிபாடுகள், சங்கராந்தி முதலிய சிறப்பு அபிஷேகங்களும் பூசைகளும்
நடைபெறுகின்றன.

     சமஸ்கிருதத்தில் ‘லிகுசாரண்ய மகாத்மியம்’ என்ற பெயரில்
தலபுராணமுள்ளது. இவ்வூரில் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

இவ்வூரில் ‘இறைவன் நற்பணி மன்றம்’ என்னும் சமய அமைப்பு கோயில்
வளர்ச்சிப் பணிகளிலும் வழிபாட்டிலும் ஈடுபட்டுச் சிறப்பாகச் செயற்பட்டு
வருகின்றது.

    “மன்னியூர் இறை சென்னியார் பிறை
     அன்னியூர் அமர் மன்னு சோதியே
     பழகுந் தொண்டர்வம் அழகன் அன்னியூர்க்
     குழகன் சேவடி தொழுது வாழ்மினே.”
                             (திருஇருக்குக்குறள் - சம்பந்தர்)

     “வேதகீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
      சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
      நாதர் நீதியினால் அடியார் தமக்(கு)
      ஆதியாகி நின்றார் அன்னியூரரே.”      (அப்பர்)