பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 307


     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

    இன்று மக்கள் ‘திருமணஞ்சேரி’ என்றே வழங்குகின்றனர். மேலைத்
திருமணஞ்சேரி என்று ஒன்றிருப்பதால் இதைக் கீழைத் திருமணஞ்சேரி
என்றனர். ஆனால் இன்று பலருக்கும் மேலைத் திருமணஞ்சேரி
தெரியாததாலும், அது பிரபலமாக இல்லையாதலாலும், இத்தலமே மிகவும்
பிரசித்தியாக இருப்பதாலும் மக்கள் இத்தலத்தை ‘திருமணஞ்சேரி’ என்றே
அழைக்கின்றனர்.

     (1) மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரிக்குக் குத்தாலம் வழியாக
நகரப் பேருந்து செல்கிறது.

     (2) தனிப்பேருந்தில் வருவோர் குத்தாலம் வந்து, பந்தநல்லூர் செல்லும்
சாலையில் சென்று ‘அஞ்சார் வார்த்தலை’ என்னும் ஊரையடைந்து,
வாய்க்கால் பாலம் தாண்டி, வலப்புறமாகப் பிரிந்து செல்லும் திருமணஞ்சேரி
சாலையில் சென்றால் இத்தலத்தையடையலாம். (முதலில் வருவது மேலைத்
திருமணஞ்சேரி, (எதிர்கொள்பாடி) அதே சாலையில் மேலும் சிறிது தூரம்
சென்றால் திருமணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி) வருகிறது.) இறைவன்
கல்யாணசுந்தரர் வடிவங்கொண்டு கோகிலாம்பிகையைத் திருமணஞ் செய்து
கொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி ஆயிற்று. இக்கோயில் மக்களிடையே
மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத்
திட்டத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு 15-9-1986ல்
மஹாகும்பாபிஷேகமும் நிறைவேறி, கோயில் வண்ணப் பொலிவுடன்
விளங்குகிறது.

     திருமணம் தடைப்படுகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து, கல்யாண
சுந்தரருக்கு மாலைசார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் நிச்சயம்
திருமணம் கூடப்பெறுவர். அவ்வாறு திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள்
மீண்டும் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு முன்னால் திருமணத்தை நடத்திக்
கொள்கிறார்கள். இக்காட்சியை இன்றும் கண்கூடாகக் காணலாம். திருமண
நாள்களிலும் வெள்ளிக் கிழமைகளிலும் இங்கு ஏராளமான திருமணங்கள்
நடைபெறுகின்றன. கல்யாணசுந்தரரை எழுந்தருளச் செய்து அவர் முன்னால்
ஒருபுறம் வரிசையாக மாலை சார்த்தி அருச்சனை செய்பவர்களையும்,
மறுபுறம் வரிசையாக திருமணம் நடந்தேறிய தம்பதிகளையும் அமரச்செய்து
அருச்சனை செய்வதும் கண்கொள்ளாக் காட்சியாகும். கோயிலுக்குள்
எப்போதும் கூட்டம்.