பக்கம் எண் :

308 திருமுறைத்தலங்கள்


     இவ்வாறே, ராகு கிரக தோஷத்தால் பீடிக்கப்பட்டு மகப்பேறு
வாய்க்காதவர்கள் இங்கு வந்து சப்தசாகர தீர்த்தத்தில் மூழ்கி, கோயிலில்
உள்ள ராகு பகவானுக்குப் பாலபிஷேகம் செய்து, பால் பொங்கல் நிவேதனம்
செய்து அதைச்சாப்பிட்டால் தோஷம் நீங்கிப் புத்திரபேறு அடைவர் என்பது
வரலாறு. இதுவும் இன்று கண்கூடாக நடைபெறுகிறது.

     தலவரலாற்றுச் செய்தி வருமாறு :- உமையம்மை, இறைவனை நோக்கி,
மீண்டும் ஒருமுறை வந்து தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார்.
இறைவனருள் தாமதிக்கவே உமாதேவி அக்குறிப்பறியாது நடந்தார். சினமுற்ற
இறைவன் உமையைப் பசுவாகப் பிறக்கக் கட்டளையிட்டார். உமையும்;
லட்சுமி சரஸ்வதி இந்திராணி சூழப் பசுவடிவங் கொண்டு அரசங்காடு முதலிய
இடங்களில் உலவிவந்தார். திருமால், பசுக்களை மேய்ப்பவராக
உருவங்கொண்டு அவைகளைப் பராமரித்து வந்தார். அம்பிகை (பசுவாகிய)
பொழிந்த பாலால் பெருமான் உள்ளம் குளிரப் பெற்றும், குளம்பின்
வருடலால் மகிழ்ந்தும், அம்பிகையை, பரதமகரிஷி நடத்திய யாகவேள்விக்
குண்டத்தில் தோன்றித் திருமணஞ்சேரியில் மணஞ்செய்து கொண்டார்
என்பது தலவராறு.

     தேரழுந்தூரில் பசுவாகிப் பிறக்க அம்பாளுக்குச் சாபம்
தரப்பட்டதாகவும் ; அசுவதக் காட்டில் பசுஉரு ஏற்று அம்பிகை உலவி
வந்ததாகவும்; கோமலில் திருமால், மேய்ப்போனாக வந்து பசுக்களைப்
பாதுகாத்து வந்ததாகவும்; திருக்கோழம்பத்தில் குளம்பின் வருடலை
ஏற்றதாகவும் ; திருவாவடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப் பட்டதாகவும்;
குத்தாலத்தில் பரதமகரிஷி நடத்திய யாகத்தீயில் உமையம்மை
தோன்றியதாவும் ; திருவேள்விக் குடியில் கல்யாண நீராடலைக் கொண்டு
கங்கணதாரணம் கொண்டதாகவும்; குறுமுலைப் பாலையில் பாலிகைஸ்தாபனம்
செய்ததாகவும்; எதிர்கொள்பாடியில் இறைவன் எதிர்கொள்ளப்பட்டதாகவும்,
திருமணஞ்சேரியில் உமையம்மையை இறைவன் திருமணஞ் செய்து
கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது. மன்மதன், ஆமை வழிபட்ட தலம்.

     இறைவன் - உத்வாகநாதசுவாமி, அருள்வள்ளல்நாதசுவாமி,
               கல்யாண சுந்தரேஸ்வரர்.
     இறைவி - கோகிலாம்பாள்

     தீர்த்தம் - சப்த சாகர தீர்த்தம் (இறைவனின் திருமணத்திற்கு
              மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு
              கடல்களும்)