80/26. திருக்குறுக்கை கொருக்கை | சோழநாட்டு (வடகரை)த் தலம் மக்கள் வழக்கில் ‘கொருக்கை’ என்று வழங்குகிறது. மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டி ‘கொண்டல், பாலந்தாண்டி, ‘கொண்டல்’ ஊரையடைந்து, ‘கொருக்கை’ என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி.மீ. சென்று (குறுகியபாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம். கார், வேன், பஸ் செல்லும். மயிலாடுதுறை - மணல்மேடு நகரப் பேருந்து உள்ளது. அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று, மன்மதனை எரித்த தலம். “ஆடல் அநங்கனை அமுது செய்த செங்கணான் இருக்கை ஈது” என்பது திருவிளையாடற்புராணத் தொடர். இத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் எனப்படும். தருமையாதீனத் திருக்கோயில். கோயில்வரை வாகனங்களில் செல்லலாம். இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, ‘தீர்க்கபாகு’ என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித்தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது எண்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது தலவரலாற்றுச் செய்தி. ‘குறுங்கை முனிவர்’ இவர் பெயரால் இத்தலம் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘குறுக்கை’ என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது. யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்கள். இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்ட தலம். இறைவன் - வீரட்டேஸ்வரர் இறைவி - ஞானாம்பிகை தலமரம் - கடுக்கா தீர்த்தம் - சூல தீர்த்தம் - கோயிலின் முன்பு உள்ளது. அப்பர் பாடல் பெற்றது. |