பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 311


      ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சூல தீர்த்தம்
உள்ளது.

    மேற்கு நோக்கிய சந்நிதி. ராஜகோபுரத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி,
சதாசிவர் முதலிய பலவகைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் பன்றி, யானை,
நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின்
உருவம் - சிற்பம் காணத்தக்கது.

     வாயிலில் உள்புறமாகத் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே - சந்நிதிகள் ஏதுமில்லை. கொடிமரம்
இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உளது. வௌவால் நெத்தி மண்டபம். இம்
மண்டபத்தில் இடப்பால் அம்பாள் - ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. தெற்கு
நோக்கியது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி,
பலிபீடம் உள்ளது. இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். மண்டபத்தின்
ஒருபுறம் பள்ளியறை உள்ளது.

     வாயிலைக் கடந்து அடுத்த மண்டபத்தையடைந்தால் இடப்பால் வள்ளி
தெய்வயானை சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து கஜலட்சுமி தரிசனம்.
பக்கத்தில் தலமூர்த்தியாகிய ‘காம தகன மூர்த்தி’ சந்நிதி உள்ளது. இடக்காலை
மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமுத்திரையுடன்,
இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில்
இம்மூர்த்தி காட்சியளிக்கின்றார். களிற்றுப்படிகள் உள்ளன. சந்நிதியின்
உள்ளே பக்கத்தில் உமையும் எதிரில் ரதி, மன்மதன் உற்சவத்
திருமேனிகளும் உள. சுவாமிக்குப் பக்கத்தில் சனகாதி முனிவர்களின்
திருமேனிகள் உள்ளன. மன்மதன் கையில் கரும்பு வில்லும், ரதியின் கையில்
கிளியும் உள்ளன.

     காமதகனவிழா மாசிமகத்தன்று, இக்கோயிலில் சிறப்பாக
நடைபெறுகின்றது. காமனைத் தகனம் செய்த இடம் ‘விபூதிக்குட்டை’ என்ற
பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக் குட்டையில் எங்கெடுத்தாலும்
மண்ணானது விபூதியாகவேயுள்ளது. உள் பிராகாரத்தில் தலமரம் ‘கடுக்கா’
உள்ளது. குறுங்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது. இச்
சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
பக்கத்தில் தீர்த்தபாகுமுனிவர் உருவம் உளது. அடுத்து, நின்ற கோலத்தில்
‘சோகஹரேஸ்வரர்’ காட்சிதரும் சந்நிதியுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத்
துர்க்கை, பிரமன் (இம்மூர்த்தத்தின் மேலே ரதி, இறைவனை வேண்டுவது
போல சுதையாலான சிற்பம் உள்ளது.) லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி,
நர்த்தன விநாயகர்