பக்கம் எண் :

314 திருமுறைத்தலங்கள்


செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும். தோணியப்பர் சந்நிதியை
இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி
என்றழைக்கின்றனர்.

     இலிங்கோற்பவ மூர்த்திக்கு எதிரில் தலமரம் கொகுடி முல்லை
உள்ளது. வலம்முடித்து உட்சென்றால் மண்டபத்தில் சித்தி விநாயகர் சந்நிதி.
அடுத்து இத்தலத்திற்குரிய சிறப்பாக உள்ள உமாமகேஸ்வரர் சிலா ரூபத்தைத்
தரிசிக்கலாம். பக்கத்தில் சுப்பிரமணியர் சந்நிதி. வலப்புறமாக வாயிலைக்
கடந்தால் நேரே அம்பாள் சந்நிதி. இடப்பால் சுவாமி சந்நிதி. இலிங்கத்
திருமேனி சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகின்றது. உள்ளே
நடராசத் திருமேனி உள்ளது. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன.

     மகாமண்டபச்சுவரில் நாரை வழிபடும் சிற்பம் உள்ளது. இத்தலத்தில்
இதற்குண்டான தொடர்பு யாதெனத் தெரியவில்லை. நாடொறும் நான்கு கால
வழிபாடுகள். பெருவிழா நடைபெறவில்லை. நவராத்திரி முதலிய சிறப்புக்கள்
மட்டும் நடைபெறுகின்றன. பக்கத்தில் ‘குரக்குக்கா’ என்னும் தலமுள்ளது.
மருதூர் அம்பலவாணப் புலவர் பாடிய தலபுராணம் உள்ளது. மூன்றாம்
குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘தனிநாயகச்சதுர்வேதி
மங்கலம்’ என்று குறிக்கப்பெறுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று,
ஊர்ச்சபையார் கூடி, ஊர்ச்சபை உறுப்பினர் ஆவதற்குரிய சட்டதிட்டங்களை
வகுத்த செய்தியைத் தெரிவிக்கின்றது. இத்திருக்கோயிலில் பூசை செய்யும்
சிவாசாரியர் அர்ச்சனை செய்யுங்காலத்தில் அர்ச்சனையையும், அதற்குரிய
சங்கல்பத்தையும்கூட அழகாகத் தமிழில் சொல்லிச் செய்த காட்சி மனத்தில்
பசுமையாகவுள்ளது.

     ‘வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
     போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
     நாதனென நள்ளிருள் முன் ஆடுகுழைதாழும்
     காதவன் இருப்பது கருப்பறியலூரே.’ (சம்பந்தர்)

 ‘நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்துதோன்றும்
 கற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்பறியலூர்க்
 கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக்
                                               கோயில்
 ஏற்றானை மனத்தினால் நினைந்த போ(து) அவர் நமக்கு இனியவாறே
                                              (சுந்தரர்)