பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 321


வீமன், நகுலன், பூசித்த லிங்கங்களும், அடுத்து திரௌபதி வழிபட்ட
வலம்புரி விநாயகரும், வலப்பால் அமிர்தகரவல்லி அம்பாள் சந்நிதியும்
உள்ளன. இடப்பால் சுப்பிரமணியரும், மகாலட்சுமி சந்நிதிகளும், அடுத்துச்
சகாதேவன் லிங்கமும் உள்ளது. வலம்முடித்துப் படிகளேறி மேலே சென்றால்
நேரே சுவாமி சந்நிதி (நீலகண்டேஸ்வரர்) தரிசனம்.

    மேல் மண்டபத்தில் வலப்பால் தனிக்கோயிலில் படிக்கரை நாதரும்
மங்கலநாயகியும் இருதனிச்சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். நடராசசபையில்
உற்சவத் திருமேனிகளும் வைக்கப்பட்டு உள்ளன. பெருவிழா சித்திரைப்
பௌர்ணமியில் ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது. சிவராத்திரி, நவராத்திரி,
நடராசர் அபிஷேகங்கள், சஷ்டி முதலிய உற்சவ விசேஷங்கள்
நடைபெறுகின்றன. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். இத்தலத்திற்குரிய
தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால்
பாடப்பட்டுள்ளது.

    “முன்னவன் எங்கள் பிரான்முதல் காண்பரிதாயபிரான்
     சென்னியில் எங்கள் பிரான் திருநீல மிடற்றெம்பிரான்
     மன்னிய எங்கள் பிரான் மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
     பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப் படிக்கரையே.”  
                                           (சுந்தரர்)

     நீர்பூத்த தாமரைப்பூ வுரியானுங்
         கரியானு நெடிய வானத்
     தேர்பூத்த மற்றோரு முற்றோரும்
         பெருவரங்க ளிறைஞ்சி யெய்தக்
     கார்பூத்த விருப்பைவன விருப்பைவன
         மெனப்புரிவோன் கலைநி லாவிற்
     றார்பூத்த முடிக்கரைகொள் படிக்கரைநா
         யகன்மலர்த்தா டலைமேல் வைப்பாம்
                                  (தலபுராணம்)

                                       - தாழ்வகற்ற
   நண்ணிப் படிக்கரையர் நாடொறும் வாழ்த்துகின்ற
   மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே.
                                      (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
     இலுப்பைப்பட்டு - மணல்மேடு அஞ்சல் 609 202.
     மயிலாடுதுறைவட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்

தலம் - 21