பக்கம் எண் :

322 திருமுறைத்தலங்கள்


85/31. ஓமாம்புலியூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம். கொள்ளிடக் கரையில் உள்ளது.

     சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து
வசதியுள்ளது. காட்டுமன்னார்குடியிலிருந்து ஓமாம்புலியூருக்கு பேருந்துச்
சாலை நன்குள்ளது. சாலை ஓரத்தில் கோயில். கோயிலிருக்குமிடத்தில்
பெயர்ப்பலகை உள்ளது. வியாக்ரபாதர் வழிபட்டதலம். இறைவன்
தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த
தலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். இவ்வூர் பிற
புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் =
ஓமாம்புலியூர் எனப்பட்டது. ஞானசம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே
வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று மருவிவருகிறது.
(இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.) பிரணவப்
பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர்
என்றாயிற்று என்றும் சொல்வர்.

     இறைவன் - பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர்,
               பிரணவபுரீஸ்வரர்
     இறைவி - புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி.
     தலமரம் - வதரி. (இலந்தைமரம்)
     தீர்த்தம் - கொள்ளிடம், கௌரிதீர்த்தம்.

     ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்றதலம்.

     கிழக்கு நோக்கிய கோயில். ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது.
எதிரில் கௌரிதீர்த்தம் உள்ளது. கரையில் தனியே ஒரு சிவாலயம்.
பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து
உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன்
இறைவன் காட்சிதருகின்றார் - சுயம்புமூர்த்தி. சுவாமி சந்நிதியில் ஒருபுறம்
சலந்தரனை அழிக்கத்திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம்
ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்
பட்டுள்ளன. இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையது.
குருமூர்த்தித்தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி (கோயிலுக்குள்ளேயே
மூலமூர்த்தியாக) உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சிதருகின்றார்.
கோஷ்டத்தில் நடராசரின் சிலாரூபம் (வியாகர் பாதருக்குக் காட்சிதந்த
வடிவம்) உள்ளது.