பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 323


ஏனைய கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் முதலியோர் உளர். அம்பாள்
சந்நிதி அழகாகவுள்ளது.

      3ஆம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘வடகரை
விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய
உலகளந்த சோழசதுர்வேதி மங்கலம்’ என்றும் ; இறைவன் பெயர் ‘வடதளி
உடையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத்
திட்டத்தில் இத்திருக்கோயிலின் சுவாமி, அம்பாள், ஆறுமுகர் விமானங்கள்
திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாசிமகத்தில் பெருவிழா,
நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் முதலிய விழாக்கள்
நடைபெறுகின்றன. நாடொறும் நான்கு காலவழிபாடுகள். பக்கத்தில் உள்ள
தலம் திருப்பழமண்ணிப்படிக்கரை.

  “சம்பரற்கருளிச் சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
  எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம்
                                              வினவில்
  அம்பரமாகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்
  உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.
                                             (சம்பந்தர்)

  ‘அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்தன்னை
      ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
  வருந்துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை
      மணவாள நம்பியை என்மருந்து தன்னைப்
  பொருந்து புனல்தழுவு அயல் நிலவு துங்கப்
      பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும்
  திருந்து திரு வடதளியெஞ் செல்வன்றன்னைச்
      சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.’        (அப்பர்)
                           
                                         -விண்ணிடை
  வாமாம் புலியூர் மலர்ச் சோலை சூழ்ந்திலங்கும்
  ஓமாம் புலியூர் வாழ் உத்தமமே.          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. துயர்தீர்த்தநாதர் திருக்கோயில்
     (பிரணவபுரீஸ்வரர் தேவஸ்தானம்)
     ஓமாம்புலியூர் - அஞ்சல் ஆயங்குடி - S.O.
     காட்டுமன்னார்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 608 306.