86/32. கானாட்டுமுள்ளூர் கானாட்டம்புலியூர் | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது. கொள்ளிடக்கரையில் உள்ள தலம். சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று, ‘மோவூர்’ தாண்டி, சாலையில் ‘முட்டம்’ என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. (இடப்புறமாக) சென்று ‘முட்டம்’ கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து செல்லும் சாலை வழியே 1 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். சிதம்பரத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது. இறைவன் - பதஞ்சலிநாதர் இறைவி - கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள் தலமரம் - வெள்ளெருக்கு, (தற்போதில்லை) தீர்த்தம் - கோயிலின் எதிரில் பெருங்குட்டை போலுள்ளது - சூரிய தீர்த்தம் எனப்படுகிறது. சுந்தரர் பாடல் பெற்றது. செங்கல்லாலான கோயில். மிகவும் பழமையானது. கிழக்கு நோக்கிய கோயில். மிகப் பழைய கோபுரம். உட்புறம் வலப்பால் அம்பாள் சந்நிதி. நடராச சபை சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. வலம்முடித்து உட்சென்றால் இடப்பால் பதஞ்சலி சிலையுள்ளது. நேரே மூலவர் சந்நிதி-சிவலிங்கத் திருமேனி, மிகக்குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறது. விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. |