பக்கம் எண் :

34 திருமுறைத்தலங்கள்


3. ஓணகாந்தன்தளி.

(காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

     தொண்டை நாட்டுத் தலம்.

     காஞ்சிபுரத்திலுள்ள பாடல்பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இதுவும்
ஒன்று. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில்
சென்று, (சர்வதீர்த்தம் தாண்டி) பஞ்சுப்பேட்டை துணைமின் நிலையத்திற்குச்
செல்ல (Elec. Sub-Station) வலப்புறமாகப் பிரியும் சிறிய பாதையில் திரும்பி
இக்கோயிலை அடையலாம்.   கோயில்   உள்ள   பகுதி   பஞ்சுப்பேட்டை
எனப்படும். பஞ்சுப்பேட்டை துணை  மின்  நிலையத்திற்கு  எதிரில் கோயில்
உள்ளது. சாலையோரத்திலேயே கோயிலும் இம் மின்நிலையமும் உள்ளன.


     வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர்
வழிபட்ட தலம். இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய
இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக
உள்ளன.   சலந்தரன்   வழிபட்டதாகச்   சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர்
சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது.  இது  பிற்காலப் பிரதிஷ்டையாகும்.
கோயில் செம்மையாக உள்ளது.  சிறிய கோயில்.  விசேஷமான  சந்நிதிகள்
வேறெதுவுமில்லை. கோயில்வரை வாகனங்கள் செல்லும்.


     இறைவன் - ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்

     சுந்தரர் பாடல் பெற்றது.

     இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத்  திறம் பேசி, ‘நெய்யும்
பாலும் தயிரும் கொண்டு’ என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார்
என்பது வரலாறு. இப்பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில்
‘வயிறுதாரிப் பிள்ளையார்’  சந்நிதி  உள்ளது.  இப்பதிகத்தில்   ஐந்தாவது
பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில்  உள்ள   புளிய
மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும் ; அஃதறிந்த  சுந்தரர்  அங்குச்
சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே
பொன்காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக
ஒரு செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படு கின்றது.