பக்கம் எண் :

342 திருமுறைத்தலங்கள்


மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம்
முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்திற்கும் முக்தி மண்டபம்
என்று பெயர்.

     வாயிலில் கொடிமரத்தை அடுத்துள்ள நந்தி விசேஷமாகச்
சொல்லப்படுகிறது. இக்கல் நந்தி புல் அருந்தியதாகச் சொல்லப்படும் செய்தி
சுவையானது. பிராமணர் ஒருவர் புல்லுக்கட்டொன்றைத் தெரியாமல்
போட்டுவிட்டதால் பசுக் கன்று ஒன்று இறந்தது. இதனால் பசுத்தோஷம்
அவருக்கு நேர்ந்தது என்று பிராமணர்கள் அவ்வேழைப் பிராமணரைத்
தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாது
ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார். அவ்வாறு முறையிடும்போது
பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர்
சிவபஞ்சாட்சரத்தைச் சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாகச்
சொன்னார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்கட்கு நேரடிச் சான்று தந்து
நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அப்பிராமணரை அழைத்து,
காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்தக் கல்நந்தியிடம்
தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து, “கல்நந்தி புல்
சாப்பிடுமானால் பஞ்சாக்ஷரத்தால் தோஷம் நீங்கும்” என்று சொல்லிப்
புல்லைத்தர, அந்நந்தியும் உண்டதாக வரலாறு. (இந்நந்தி புல் அருந்தியதால்
நாக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கவில்லை.)

     மூலவர் கிழக்கு நோக்கிய சந்நிதி. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தி-உயர்ந்த
பாணத்துடன் மனநிறைவான தரிசனம்.

     அம்பாள் சந்நிதி - திருமணக்கோலக் காட்சி. நின்ற திருக்கோலம்.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள்.

    மாசி மகத்தில் பெருவிழா ஏகதின விழாவாக நடத்தப்படுகிறது.
தைத்திங்களில் ஹரதத்தருக்குக் காட்சி தந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி முதலிய விசேஷங்களும்
நடைபெறுகின்றன.

    சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம்
‘விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர்’ என்றும் ;
இறைவன் பெயர் ‘அக்னீஸ்வரம் உடையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன.