சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். உள்வலத்தில் கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தனவிநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வலம் முடித்து உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிர மணியரையும் தரிசித்து வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். சதுரபீடம் - உயர்ந்த பாணம் - கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார். “இன்று நன்று நாளைநன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரி புனல் கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.” (சம்பந்தர்) “நெற்றிமேல் கண்ணினானே நீறுமெய் பூசினானே கற்றைப் புன் சடையினானே கடல்விடம் பருகினானே செற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானே குற்றமில் குணத்தினானே கோடிகாவுடைய கோவே." (அப்பர்) “காலைக் கலையிழையாற் கட்டித்தாங் கையார்த்து மாலை தலைக்கணிந்து மைஎழுதி - மேலோர் பருக்கோடி மூடிப் பலர் அழா முன்னம் திருக்கோடிகா அடைநீ சென்று.” (ஐயடிகள் காடவர்கோமான்) - அஞ்சுகங்கள் நாடிக்காவுள்ளே நமச்சிவாயம் புகலுங் கோடிக்காமேவுங் குளிர்மதியே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. கோடீஸ்வரர் திருக்கோயில் திருக்கோடிகாவல் & அஞ்சல் 609 802. (வழி) நரசிங்கன் பேட்டை திருவிடை மருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம் |