பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 347


     சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

     திருவாவடுதுறை ஆதீனக் கோயில். காளி, சூரியன், திருமால், பிரமன்,
அகத்தியர் ஆகியோர் வழிபட்டது. இத்தலம் பஞ்ச மங்கள க்ஷேத்ரம் என்று
புகழப்படும் சிறப்புடையது. (மங்கள விமானம், மங்களவிநாயகர்,
மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி.)

இத்தலவரலாறு வருமாறு :

     முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மந்திரியொருவன் மன்னனின்
வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அ/மி. பிராணவரதேஸ்
வரருக்குக் கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று
மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி
அத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக்காப்பு தருமாறு
நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் தன் உடலைத்
திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு
நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது
திருமங்கலக்குடியை அடைந்ததும், மங்களாம்பிகை அருளால் அவன் உயிர்
பெற்றான். மங்களாம்பிகை மாங்கல்யக்காப்பு தந்தருளி ஆட்கொண்டாள்.
அன்று முதல் தன்னை வழிபடுவோர்க்கும் மாங்கல்ய பலம் அருளுவதாக
அம்பிகை அருளினாள் என்பது வரலாறு. ஆகவே திருமணத்தடை
ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள்.
இப்பகுதியில் இவ்வரலாற்றையொட்டி

    “பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர்”
    “மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை”

     என்ற மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகின்றது.

     நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில்.
அத்தோஷத்தை நீக்கியருளிய பெருமான் திருமங்கலக்குடியில் எழுந்தருளி
யுள்ள பிராணவரதேஸ்வரரேயாவார். ஆகவே திருமங்கலக்குடியை வழிபட்ட
பின்பே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாக
இருந்து வருகின்றது. கோயிலுக்கு வெளியே திருக்குளம் உள்ளது. ஐந்து நிலை
ராஜகோபுரம். முன் மண்டபத்தில் நந்தி, பலிபீடம். வெளிச்சுற்றில் விநாயகர்
சந்நிதி, முன்மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.
உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன;
விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும் நடராசசபையும்
உள்ளன. இரு நடராஜ மூர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆனித்
திருமஞ்சனநாளிலும்