பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 355


1 கி.மீ. உள்ளே சென்றால் ஊரையடையலாம். இதற்கடுத்த தலம் திருவாய்ப்
பாடி ஆகும். கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ.

     சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். மண்ணியாற்றின்
கரையிலுள்ள பதி. இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப் படலத்தில்
பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில்
சிவபெருமானை வழிபட்டு சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர
பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த
ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது.
சத்தியகிரி, குமாரபுரி, சண்டேசுவரபுரம் என்பன வேறு பெயர்கள்.

     இறைவன் - சத்தியகிரீஸ்வரர், சத்யகிரிநாதர்.
     இறைவி - சகிதேவியம்மை.
     தீர்த்தம் - மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம். கோயிலின்
              பின்னால் உள்ளது.)

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     சிபி, அரிச்சந்திரன் வழிபட்டது. வைணவப் பெரியவரான பெரிய
வாச்சான் பிள்ளை அவதரித்த பதி. மண்ணியாற்றுக்குச் சத்திய நதி,
சுப்பிரமணிய நதி என்ற பெயர்களுமுண்டு.

     கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், கோயில் கட்டுமலை
மேல் உள்ளது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும்,
சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன.

   மகாமண்டபத்தில் நடராசர் தரிசனம். பக்கத்தில் தட்டினால் வெண்கல
ஓசை தரும் பைரவரும், சூரியசந்திரரும் நால்வரும் எழுந்தருளி உள்ளனர்.
விநாயகர், முருகன், கஜலட்சுமி, சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.
சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன.
நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு
அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். தீர்த்தக் கிணறு உள்ளது. கட்டுமலைக்குக்
கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது. மூலவர் -
சத்தியகிரீஸ்வரர்.

    (சண்டேசுவரர் வரலாற்றைப் பெரிய புராணத்துள் காண்க.) திருப்பணிகள்
நடைபெற்று வருகின்றன.