96/42. திருந்துதேவன்குடி நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி | சோழநாட்டு (வடகரை)த் தலம். மயிலாடுதுறையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்தில் செல்லலாம். நண்டு பூசித்த தலம். ஆதலின் ‘நண்டாங் கோயில்’ என்று இன்று வழங்குகிறது. திருந்துதேவன்குடி என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம் நன்செய் நிலங்களாயின. ‘கோயிலைச் சுற்றி அகழியுள்ளது.’ இப்பகுதி திருத்தேவன்குடி என்றும் சொல்லப்படுகிறது. மிகப் பெரிய சிவாலயம் பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன. இறைவன் - கற்கடகேஸ்வரர் (கற்கடம் : நண்டு) இறைவி - அருமருந்தம்மை, அபூர்வநாயகி. (வழிபட்டு நோய் நீங்கப் பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை ‘அருமருந்தம்மை’ யாகும். பின்னர் பழைமையாக இருந்த அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே ‘அபூர்வநாயகி’ திருமேனியாகும். சம்பந்தர் பாடல் பெற்றது. கிழக்கு நோக்கிய கோயில். சுற்றிலும் வயல்கள் ‘தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி’ என்னும் தேவாரத் தொடருக்கேற்ப கோயிலில் தேனீக்களின் ரீங்கார ஒலி கேட்கிறது. கோயிலில் பாதுகாப்பில்லாததால் திருமேனிகள் வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள தலம் திருவிசலூர். ஒருகால பூசை மட்டுமே குருக்களின் ஆர்வத்தில் நடைபெற்று வருகின்றது. “மருந்துவேண்டில் இவை, மந்திரங்கள் இவை, புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை, திருந்துதேவன் குடிதேவர் தேவு எய்திய அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே” (சம்பந்தர்) |