மூவர் பாடல் பெற்ற தலம். செட்டிப்பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொல்லியமையால் சாட்சிநாதர் என்று இறைவனுக்குப் பெயர். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானது. இம் மரம் தலமரமன்று. தலமரம் புன்னைமரமே. வன்னி மரம் இரண்டாம் பிராகாரத்தில் உள்ளது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. கிழக்கு நோக்கிய கோபுரவாயில். முதற்பிராகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள் முதலியவை உள்ளன. குகாம்பிகை சந்நிதி விசேஷமானது. ஆறுமுகனை குழந்தை வடிவில் இடையில் நந்தி அரவணைத்து நிற்கும் காட்சி அற்புதமாகும். இவ்வன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப் பெறும். தடைபட்ட திருமணம் நடைபெறவும் கருவுற்ற தாய்மார்களுக்கு சுகப்பிரசம் ஆகவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் இது சிறந்த பிரார்த்தனையாகும். பௌர்ணமியில் அம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரண்டாவது பிராகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி உள்ளது. தலவிநாயகர் - பிரளயங்காத்த பிள்ளையார் - சந்தன திருமேனி, விநாயக சதுர்த்தி நாளில் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும். அவ்வளவு தேனும் மூர்த்தத்தில் ஊறிப் போகும். இதனால் இவர் தேன்அபிஷேகப் பிள்ளையார் எனப்படுகின்றார். இந்நாளில் பெருமளவில் மக்கள் வந்து தரிசிக்கின்றனர். தலபுராணமும், உலா நூலும் உள்ளனவாகத் தெரிந்தாலும் அச்சிடப்பட்டுக் கிடைக்கவில்லை. திருவையாறு வித்வான் வை. சுந்தரேச வாண்டையார் அச்சிட்டுள்ள ‘புறம்பயமாலை’ என்னும் நூலில் 10 பாடல்களே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இக்கோயில் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு உரியதாகும். கி.பி. 800ல் நடந்த போரில் பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன், செங்கற் கோயிலாக இருந்த இந்த ஆலயத்தைக் கருங்கற்களால் கட்டியதாக வரலாறு. “மறம்பய மலைந்தவர் மதிற் பரிசறுத்தனை நிறம்பசுமை செம்மை யொடிசைந்துனது நீர்மை திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்(கு) அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்.” (சம்பந்தர்) |