பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 373


     முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது.
விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால்
பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும்,
பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும்,
பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

      உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் காட்சி. ஆபத்
சகாயேஸ்வரர். “பாவந்தீர்க்கும் பழன நகரார்” என்று போற்றிப் பாடிய
பழனப் பெருமான் விளக்கொளியுமின்றி இருட்டிலிருப்பதைக் கண்டு
தரிசிக்கும்போது உள்ளத்தெழும் வேதனை உரைத்தலுக்கடங்காது. உயர்ந்த
பாணம் - அழகான மூர்த்தி. ஆலயம் பராமரிப்பின்றி அழிகின்றது.

     வெளிப்பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி. பலாமரம், தலமரமான வாழை
உள்ளன. சுற்று மதில் வீழ்ந்து சிதலமடைந்துள்ளது. தஞ்சை அரண்மனை
இலாகாவுக்குச் சொந்தமான கோயில் - எவ்வித வசதியுமின்றி போதிய
விளக்கு வசதிகூட இல்லாமல் காட்சியளிக்கிறது. நித்தியப்படி இருவேளை
பூஜை மட்டுமே. எந்த உற்சவமும் நடைபெறவில்லை. ஏழூர் சப்தஸ்தான
விழாவுக்கு மட்டும் சுவாமி கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
கும்பாபிஷேகம் நடைபெற்று நாற்பதாண்டுகளுக்கு மேலாகிறதாம்.

     (கோயில் குருக்கள் திருவையாற்றிலிருந்து வந்து பூஜை செய்கின்றார்.)
இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் திங்களூர் உள்ளது.

   “வேதமோதி வெண் ணூல்பூண்டு வெள்ளை எருதேறிப்
    பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
    நாதா எனவு(ம்) நக்கா எனவு(ம்) நம்பா எனநின்று
    பாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.”   (சம்பந்தர்)
   
   “மண்பொருந்தி வாழ்பவர்க்கு(ம்) மாதீர்த்த வேதியர்க்கும்
    விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
    பண்பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பனைஎன்
    கண்பொருந்தும் போதத்துங் கைவிட நான்கடவேனோ."   (அப்பர்)

    “பாங்கார் பழனத்து அழகா !”        (மணிவாசகர்)