இறைவன் - பஞ்சநதேஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன். இறைவி - தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி. தலமரம் - வில்வம். தீர்த்தம் - சூரிய தீர்த்தம், காவிரி. மூவர் பாடல் பெற்ற சிறப்புத்தலம். இத்தலத்திற்குப் பதினெட்டு பதிகங்கள் உள்ளன. கிழக்கு ராஜகோபுரமே பிரதானவாயில். ஏழு நிலைகளையுடையது. சிற்பங்களையுடைய பழைமையான கோபுரம். விசாலமான உள்ளிடம். வலப்பால் பெரிய மண்டபம் உள்ளது. இதில் வல்லபை விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் உள்ளன. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. சிற்பங்கள் அதிகமில்லை. வலப்பால் அம்பாள் கோயிலுக்குப் போகும் வழியுள்ளது. உள்நுழைந்து வலமாக வரும்போது சூரிய தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் நல்ல கட்டமைப்பில் உள்ளது. தெற்கு வாயில் வழியைக் (தெற்கு வாயிலில் வெளிப்புறம் ஆட்கொண்டார் சந்நிதி உள்ளது. இதற்கு எதிரில் உள்ள வேலியிட்ட பள்ளத்தில் குங்கிலியம் இட்டுப் புகைக்கும் பழக்கம் உள்ளது. இங்குக் குங்கிலியப் பொட்டலங்களை விற்கிறார்கள். மக்கள் அவற்றை வாங்கி அக்குழியில் புகையும் நெருப்பில் கொட்டுகிறார்கள்.) கடந்து சென்றால் பிராகாரத்தில் அப்பருக்குக் கயிலைக் காட்சியருளிய சுவாமி கோயில் (தென்கயிலை) தனிக்கோயிலாக - கோபுர, விமான அமைப்புகளுடன் உள்ளது. மூன்று நிலைக் கோபுரத்தையுடைய இக்கோயிலின் உட்சுற்றில் அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் உள்ளன. நுழைவு மண்டபத்தில் வலப்பால் அப்பர் பெருமானின் நின்ற திருக்கோலம் காட்சியளிக்கிறது. மூலவர் சிவலிங்கத் திருமேனி. பின்னால் சுவாமி அம்பாள் நின்ற கோலம் உள்ளது. இக்கோயில் வாயிலில்தான் அப்பர் கயிலைக் காட்சி கண்ட ஐதீகம், ஆடி அமாவாசையன்று நடைபெறுகின்றது. பிராகாரத்தில் தொடர்ந்து வலம் வரும்போது விநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்து மேலக் கோபுரவாயில். ஏழுநிலைக் கோபுரம் சிற்பங்களுடன் புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. அடுத்துள்ள கோயிலும் விநாயகர் சந்நிதியே உள்ளது. அடுத்து இடப்பால் வடகயிலாயம் உலகமாதேவீச்சரம் என்று வழங்கப்படும் தனிக்கோயில் பிராகார மதிலை யடுத்து அப்பால் உள்ளது. செல்வதற்கு வாயில் உள்ளது. |