மூலவர் சிவலிங்கத் திருமேனி. வலம் முடித்து, மூன்று நிலைகளையுடைய மூன்றாவது கோபுரத்தைக் கடந்து துவார விநாயகராகவுள்ள இரட்டை விநாயகர்களையும் தண்டபாணியையும் வணங்கி உட்சென்றால் கவசமிட்ட கொடிமரம், முன்னால் சித்தி விநாயகரும் உள்ளார். பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. இப்பிராகாரத்தின் கோடியில் ஒலி கேட்கும் இடம் என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ள இடத்தில் நின்று, கற்சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குழியில் வாய்வைத்து, உரத்த குரலில் ‘ஐயாறா’ என்று அழைத்தால் அவ்வொலி பன்முறை பிரதிபலிப்பதைக் கேட்கலாம். (நாம் அழைத்தபோது ஐந்துமுறை கேட்டது, இன்னும் உரத்து அழைத்தால் ஏழுமுறை கேட்பதாகச் சொல்கிறார்கள்.) “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்னும் அப்பர் வாக்கு இங்கு நினைவிற்கொள்ளத் தக்கது. இப்பிராகாரத்தை வலமாக வந்து, கொடிமரத்தைத் தாண்டி, படிகள் ஏறினால் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. நீண்ட விசாலமான மண்டபம். மூலவர் நுழைவு வாயிலுக்குப் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் - சந்நிதியில் ஓர் இரும்புப் பேழையில் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம், ஸ்படிக அம்பாள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு நாடொறும் காலையில் பூஜை நடைபெறுகின்றது. சுவாமி தன்னைத்தானே பூசிப்பதாக ஐதீகம். இது தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு வருமாறு” :- இக்கோயில் பூஜைமுறை உள்ள சிவாசாரியார் ஒருமுறை காசிக்குச் சென்றார். அவருடைய பூஜை முறைக்காலம் வந்து விட்டது. ஆனால் அதற்குள் அவரால் திரும்பி வர முடியவில்லை. அந்நிலையில் இறைவனே அந்த சிவாசாரியார் போல சிவவேடமணிந்து அவருடைய பூஜை முறையைத் தவறாது செய்து வந்தார். திரும்பி வந்த சிவாசாரியார் தன்னைப்போலவே ஒருவர் தன் முறையைச் செய்து வருவதறிந்து அவரைப் பார்த்து ‘நீ யார்?’ என்று கேட்க, அவரும் ‘நீ யார்?’ என்று கேட்டுவிட்டு, ‘உள்ளே வா காட்டுகிறேன்’ என்று கூறிச் சென்றார். சிவாசாரியார் பின்தொடர்ந்து செல்ல, உள்ளே சென்ற உருவம் மறைந்தது. அப்போது இதுகாறும் பூஜை செய்து வந்தவர் இறைவனே என்று தெரிய வந்தது. ஆகவேதான் “தன்னைத் தானே வழிபடுவது” என்ற ஐதீகத்தில் இரு லிங்கங்களும் ஓர் அம்பாளும் அப்பேழையுள் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. இந்த அற்புதத்தையொட்டியே இன்றும் இக்கோயிலில் சித்திரை ஆயில்யத்தன்று சுவாமி புறப்பாடும் |