செய்து, இறைவனாக வந்த சிவாசாரியார், பூஜை முறையினராகிய சிவாசாரியார் என்கிற ஐதீகத்தில் இரு சிவாசாரியார்களுக்கும் பரிவட்டம் சார்த்தி, சுவாமியுடன் வலம் வரும் சிறப்பு விழா நடைபெறுகின்றது. இந்த அதிசயத்தையே மாணிக்கவாசகர் தம் அமுதவாக்கில் “ஐயாறு அதனில் சைவனாகியும்” என்று குறித்துள்ளார். இக்கோயிலில் சித்திரையில் நடைபெறும் பெருவிழாவில் இந்த மூன்று திருமேனிகளுக்கும் - ஸ்படிகலிங்கம், ஸ்படிக அம்பாள், மரகதலிங்கம் - ஐந்தாம் நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சுதையாலான பெரிய துவாரபாலகர் உருவங்களைக் கண்டு தொழுது துவார விநாயகரையும், முருகனையும் வணங்கி உள்ளே சென்றால் நேரே பஞ்சநதேஸ்வரர் சந்நிதி தெரிகின்றது. உள் பிராகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தின் சுவர்களில் பலவகை வரலாற்றுச் சிற்பங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பவானி நாதர் சிவலிங்கமும், ஆதிவிநாயகரும் இவற்றையடுத்து நவக்கிரகங்களும், பஞ்சபூத லிங்கங்களும், சந்திரசேகரர் சந்நிதியும் உள்ளன. ஆதி விநாயகர், முன்பு ஒரு கல்வெட்டு உள்ளது. இச்சந்நிதியில் இரவு பகல் எந்நேரமும் எரியும் விதத்தில் எட்டு இழையாலான திரிஇட்டு நேத்திர தீபம் ஏற்றும் தர்மத்திற்காக நிபந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தி இதில் சொல்லப் படுகிறது. இத்தீபத் தொண்டு தடைப்படுமாயின் இன்ன முகவரிக்குத் தெரிவித்தால் அது தொடர்ந்து செய்ய மேற்கொள்ளப்படும் எனும் குறிப்பும் உள்ளது. இதன் பக்கத்தில் மாடிக்குச் செல்லும் வழியுள்ளது. அதன்மேற் சென்றால் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டு மகிழலாம். அடுத்துப் பிராகாரத்தில் சித்தி விநாயகர், விசுவநாதர் விசாலாட்சி, தண்டபாணி உருவத் திருமேனிகள் உள்ளன. தனுசு சுப்பிரமணியரும், செல்வ விநாயகரும் உள்ளனர். ஆவுடை விநாயகர் தரிசிக்கத்தக்கது. (ஆவுடையார்) மீது விநாயகர். மகாலட்சுமி சரஸ்வதி கூடியுள்ள சந்நிதி. துர்க்கத்தாம்பாள் சந்நிதி கண்டு தொழுதவாறே வந்து சண்டேசுவரரைத் தரிசிக்கலாம். சண்டீசுவரர் சந்நிதி தனிக்கோயிலாக விமானத்துடன் அமைந்துள்ளது. விமானத்தில், ஒரு புறத்தில் பாற்குட அபிஷேகக் காட்சியும் மற்றொரு புறம் இறைவன் விசாரசருமருக்குச் சண்டீசப் பதத்தையருளும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நடராச சந்நிதி அழகுடையது. சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலம் நீங்கலாக ஏனைய ஆறு தலங்களின் சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. சுரஹரேஸ்வரர் திருமேனி உள்ளது. |