பக்கம் எண் :

378 திருமுறைத்தலங்கள்


     மூலவர் தரிசனம். பஞ்சநதேஸ்வரர் அழகான திருமேனி. சுயம்பு
மூர்த்தி, மூலவர் முன் கவசமிடப்பட்டுள்ளது. இக்கவசத்தில் பசுவின்
உருவமும் அதன்மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவாமிக்குத்
‘திரிசூலி’ என்ற பெயரும் சொல்லப்படுகிறது. “வடிவேறு திரிசூலம் தோன்றும்
தோன்றும்” என்னும் திருமுறைத் தொடர் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.
அலங்காரம் செய்து பார்க்கும் நிலையில் சிவலிங்கத் திருமேனி, பாம்பு
படமெடுப்பது போலவும், கொண்டை போட்டிருப்பது போலவும் பலவித
வடிவங்களில் தோன்றுவதைக் காணலாம். சுவாமிக்குப் புனுகு சட்டம்
மட்டுமே சார்த்தப்படுகிறது. அதுவும் கைபடாமல் சார்த்தப்பட வேண்டும்.
மற்ற அபிஷேக மெல்லாம் ஆவுடையார்க்கே.

     மூலவரின் கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்டமூர்த்தமாகத்
தட்சிணாமூர்த்தி உள்ளார். இதைத் தட்சிணாமூர்த்தி பிராகாரம் என்கின்றனர்.
சுவாமி ஜடாபாரமாக இருப்பதாக ஐதீகம். ஆதலால் இவ்வுள் பிராகாரத்தில்
எவரும் நுழைந்து வலம் வரக்கூடாது என்பர். வெளிவரும்போது இடப்பக்க
மூலையில் மெய்கண்டார், உமாபதி சிவம் அருணந்தி சிவம் ஆகியோர்
சந்நிதி உளது.

     சுவாமிக்குப் ‘பஞ்சநதேஸ்வரர்’ என்னும் பெயர் வந்தமைக்குரிய
வரலாறு வருமாறு :-

     இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள அந்தணக்குறிச்சி என்னுமிடத்தில்
பங்குனித் திருவாதிரையில் சிலாதமகரிஷிக்கு நந்தியெம்பெருமான்
அவதரித்தார். அன்று மாலையே இறைவன் நந்தியை இங்கு அழைத்து
வந்து, ஐந்துவித தீர்த்தங்களால் ((1) சூரியதீர்த்த நீர் (2) சந்திரதீர்த்த நீர்
(3) நந்தி வாயில் ஒழுகிய நுரை நீர் (4) காவிரி நீர் (5) அம்பாளின்
திருமுலைப்பாலாகிய நீர்) அவருக்கு அபிஷேகம் செய்து, ‘அதிகார நந்தி’
பட்டஞ்சூட்டிக் காவற் பொறுப்பை ஒப்படைத்தார். மறுநாள் புனர்பூசத்தன்று திருமழபாடியில் நந்திக்குத் திருமணம் செய்து வைத்தார். இதனுடைய
அங்கமாகத்தான் சப்தஸ்தானத் திருவிழா - ஏழூர் திருவிழா சித்திரையில்
நடைபெறுகிறது.

     நந்தியெம்பெருமானுக்குத் திருமழபாடியில் நடைபெற்ற திருமண
விழாவின் ஊர்வலமாகச் சப்தஸ்தான விழா இவ்வேழு தலங்களிலும்
நிகழ்கிறது. ஐயறப்பர் நந்தியெம்பெருமானுடன் சித்திரை மாதம் முழுமதி
நாளுக்கடுத்த விசாகத்தில் புறப்பட்டு ஏழூர்களுக்குச் செல்வர். ஏழூர்
இறைவரும் ஐயாறப்பரை எதிர்கொண்டழைத்துத் தாமும் திருவுலாவிற்கு
எழுந்தருளுவர். ஏழூர் இறைவரும் உலா வரும்