பக்கம் எண் :

382 திருமுறைத்தலங்கள்


பெயருக்கேற்ப பசு நெய் இவருக்குகந்த அபிஷேகம் ஆகும். துவார கணபதி
நர்த்தன கணபதியாக உள்ளார்.

     அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை
என்றும் குறிக்கப்படுகிறது. கல்வெட்டுக்களில் இத்தலம் “இராஜராஜ வளநாட்டு
பைங்காநாட்டு திருநெய்த்தானம்” என்றும் ; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு (மேளக்காரர், தேவரடியார்கள்) நிலங்கள் அளித்தமை சுவாமியின் நைவேத்யத்திற்கு நிலங்கள் விட்டது முதலிய செய்திகள் தெரிய வருகின்றன. இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகின்றது. இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.

    இத்திருக்கோயிலின் கருவறை விமானம் ஏகதள அமைப்புடையது.

  
 “மையாடிய கண்டன்மலை மகள் பாகமதுடையான்
     கையாடிய கேடில் கரியுரி மூடிய வொருவன்
     செய்யாடிய குவளைம் மலர் நயனத் தவளோடும்
     நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தான மெனீரே”   (சம்பந்தர்)
 
    “வானவர் வணங்கியேத்தி வைகலு மலர்கள் தூவத்
     நானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்கணேற்றன்
     தேனமர் பொழில்கள் சூழத் திகழு நெய்த்தான மேய
     கூனிள மதியினானைக் கூடுமாறறி கிலேனே.”     (அப்பர்)
                                    
                                           -“பொய்யகற்றி
     மெய்த்தான நின்றோர் வெளித்தானமேவு திரு
     நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே.”       (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. நெய்யாடியப்பர் திருக்கோயில்
      தில்லைஸ்தானம் & அஞ்சல் - 613 203
      திருவையாறு வட்டம் - தஞ்சை மாவட்டம்.