பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 383


107/53. பெரும்புலியூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     திருவையாறு - கல்லணை, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில்
தில்லைஸ்தானத்திற்கு வலப்புறமாகப் பிரியும் கிளைச் சாலையில் 4 கி.மீ.
சென்றால் பெரும்புலியூரை அடையலாம். கோயில் வரை காரில் செல்லலாம்.
வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட தலமாகும்.

    இறைவன் - வியாக்ரபுரீஸ்வரர்
    இறைவி - சௌந்தரநாயகி
    தலமரமில்லை. தீர்த்தம் பக்கத்தில் உள்ளது.

    சம்பந்தர் பாடல் பெற்றது.

    ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரம்
இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகப்
பழைமையானவை - கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்புறம் சுதையாலும்
அமைந்தவை.

     உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் காட்சி தருகின்றார். பிராகார
வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து
சுப்பிரமணியர் சந்நிதி. இக்கோயிலைப் பாதுகாத்து பிரபலமாகச் செய்த
சுந்தர சுவாமிகள் என்பவருடைய உருவச்சிலை உள்ளது.

     அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்றநிலை. அழகான
உருவம் - இனிய புன்முறுவலுடன் இதமான காட்சி. நவக்கிரக சந்நிதியில்
எல்லா உருவங்களும் நடுவிலுள்ள சூரியனைப் பார்த்தவாறே
அமைந்துள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும்,
இலிங்கோற்பவரிடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகின்றனர்.
சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

     சுவாமியின் கருவறை, கீழே அமைந்த நான்கு அடுக்குகளாலான
பத்மபீடத்தின்மீது அமைந்துள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி
சுதையாலும் ஆனது. சிறிய விமானம் - செடிகள் மூடியுள்ளன. மூலவர்
கிழக்கு நோக்கிய சந்நிதி. சற்று உயரமான ஆவுடையார், மூலவருக்குப்
பக்கத்தில் வெளியே காசி விசுவநாதர் இலிங்கம் வலப்பால் உள்ளது.

     பெருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. நித்திய வழிபாடுகள்
மட்டுமே நடைபெறுகின்றன.