வைத்திய நாத சுவாமி சந்நிதி என்பது ஜ்வரஹரேஸ்வரர் சந்நிதியாகும் என்பர் ஆய்வாளர்கள். இது இராசேந்திரன் காலத்தியது. பாலாம்பிகை கோயில் இராசராசன் காலத்தது. நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நடுச் சுற்றிலுள்ள கோபுரம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. வெளிசுற்றுச்சுவரின் உள்ள நுழைவு வாயில் கோபுரம் பாண்டியர் திருப்பணி. கோயிலுக்கு வெளியில், எதிரில் உள்ள மண்டபம் - கோனேரிராயன் மண்டபம் என்றழைக்கப்பட்டது. கோனேரிராயன் என்பவன், விஜயநகர ஆட்சியின் தொடர்புடையவனாக இருந்தான். இக்கோயில் வழிபாட்டுக்கென கிருஷ்ண தேவராயர் நிலங்களைத் தந்த செய்தியை ஈங்கோய் மலை கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு பல மன்னர்களும் பல்வேறு காலங்களில் செய்து வைத்த திருப்பணிகளின் மொத்த வடிவமே இன்று நாம் காணும் கோயிலாகும். இத் தலத்தில் கொள்ளிடம் நதி, உத்தரவாகினியாக - வடக்கு முகமாகப் பாய்ந்தோடுவது சிறப்புடையதாகும். இங்குள்ள ஒரே கல்லில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் திருவுருவம் தரிசிக்கத்தக்கது. கிழக்கு நோக்கிய பெரிய திருக்கோயில், ஏழு நிலைகளையுடைய கோபுரம். உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இரண்டாங் கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம் - கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. ஜ்வரஹரேசுவரர் சந்நிதியுள்ளது. உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் - சிவலிங்கத் திருமேனி, புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசர் எழுதிய தலபுராணம் உள்ளது. லால்குடி புலவர் திரு. ப. அரங்கசாமி அவர்கள் மும்மணிக்கோவையும், திருவரங்கம் ஆசுகவியரசு திரு. க. இராசவேலு அவர்கள் (வழக்கறிஞர்) இரட்டை மணி மாலையும் பாடியுள்ளனர். ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் திருமண விழா பெருவிழாவாக |