பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 401


     வெள்ளையானையும் சிலந்தியும் வழிபட்ட தலம். யானை (ஆனை)
வழிபட்டதால் ஆனைக்கா என்றும் பெயருண்டாயிற்று. முற்பிறவியில்
சிலந்தியாக இருந்து வழிபட்டதே பின்பு கோச் செங்கட் சோழனாகப் பிறந்து
இறைவனுக்கு (யானைபுகாத வண்ணம்) மாடக்கோயில்கள் எழுபதைக்
கட்டியதாக வரலாறு.

   “இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
    எழில் மாடம் எழுபது செய்து உலகாண்ட
    திருக்குலத்து வளச் சோழன்”


என்பது திருமங்கையாழ்வார் வாக்கு.

     பிரமன், சிலந்தி, யானை, அஷ்டவசுக்கள், அம்பிகை, பராசரர்,
கோச்செங்கட் சோழன் முதலியோர் வழிபட்ட சிறப்புடையது. அப்புத்தலம்
என்பதற்கேற்ப சுவாமியின் அடியில் முன்பு நீர் ஊறிக் கொண்டிருந்தது.
தற்போது நீர்க் கசிவு உள்ளது.

     இறைவன் - ஜம்புகேஸ்வரர், அப்புலிங்கேஸ்வரர், வெண்ணாவலீசர்,
               ஜம்புநாதர், ஆனைக்கா அண்ணல், நீர்த்திரள் நாதர்.
     இறைவி - அகிலாண்டேஸ்வரி
     தலமரம் - வெண்ணாவல் மரம் (ஜம்பு) கருவறையின் வெளியில்
              பிராகாரத்தில் உள்ளது.
     தீர்த்தம் - (அருகில் ஓடும்) காவிரி.

     
மூவர் பாடல் பெற்றது.

     திருப்பணிகள் செய்யப்பட்டுப் பொலிவுடன் விளங்குகிறது. சுவாமி
மேற்கு நோக்கிய சந்நிதி. சுவாமியின் கருவறையில் ஒன்பது வாயில் கொண்ட
சாளரம் உள்ளது. உயர்ந்த கோபுரங்களையும் நீண்டுயர்ந்த மதில்களையும்
உடைய பெரிய கோயில்.

     அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. கிழக்கு நோக்கிய அழகான
சந்நிதி. அம்பிகையே இறைவனைப் பூசித்து வழிபட்ட தலம் இதுவாதலின்
இன்றும் இக்கோயிலில் உச்சிக் காலத்தில் அம்பாள் கோயில் குருக்கள்,
அம்பிகையைப்போல வேடம் தரிசித்துச் சுவாமி கோயிலுக்கு வந்து
அர்ச்சனை செய்கிறார். இங்குள்ள பரம்பரை அர்ச்சகர்களுக்குப் பண்டிதர்கள்
என்று பெயருண்டு. இத்தலத்து இறைவன், உறையூர்ச் சோழனின்
பதக்கத்தினை அணிந்து அருள் புரிந்த வரலாற்றைச் சுந்தரர் இத்தலப்
பதிகத்தில் 7ஆம் பாடலில்

தலம்-26