சிறப்பித்துப் பாடியுள்ளார். பெரியபுராணம் இச்செய்தியை “வளவர் பெருமான் திருஆரம்” என்று தொடங்கும் ஏயர்கோன் வரலாற்றுப் பாடலால் குறிக்கின்றது. திருப்பணிகள் செய்யப்பட்டுப் புதுப்பொலிவுடன் திகழும் இக்கோயிலின் உள்ளே, கோயில் வரலாற்றப் படங்கள் அழகான வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறே அம்பிகையின் பல வடிவங்களும் வண்ணத்தில் எழுதப்பட்டு அம்பாள் சந்நிதியின் வழியில் காட்சியளிக்கின்றன. அம்பாள் சந்நிதிப் பிராகாரத்தில் ஆதிசங்கரரின் சௌந்தர்யலஹரிப் பாடல்களின் (அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் மொழிபெயர்த்த) தமிழாக்கப்பாடல்கள் சலவைக் கற்களில் எழுதப்பட்டுச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடத்திற்கு உரிமையுடையதாகும். ஈஸ்வர சாந்நித்தியத்திற்காக ஸ்ரீ ஆதிசங்கரர் யந்திர பிரதிஷ்டை செய்துள்ள பல ஆலயங்களுள் இதுவும் ஒன்று. அகிலாண்டேஸ்வரிக்கு முன்பாக விநாயகரைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் இரு திருச்செவிகளுக்கும் ஆபரணமாக ஸ்ரீ சக்கரங்கள் இரண்டைச் செய்து ஸ்ரீ ஆதிசங்கரர், அம்பிகைக்கு அவற்றைத் ‘தாடங்கமாக’ அணிவித்தார் என்பது வரலாறு. அதையொட்டியே, இன்றும், இத்திருக்கோயிலில் திருப்பணி செய்வதோ, தாடங்கத்தைப் பழுதுபார்த்து அணிவிப்பதோ, மகாகும்பாபிஷேகம் செய்விப்பதோ இவைகளெல்லாம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் அவர்களாலேயே பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்ரீ சக்கரத்தோடுகள் (தாடங்கம்) அம்பிகையின் திருச்செவிகளில் காட்சியளிக்கின்றன. இத்தலத்திற்குக் கச்சியப்ப முனிவர் தலபுராணம் பாடியுள்ளார். இக்கோயில் நான்காவது பிராகார மதிற்சுவருக்குத் “திருநீற்றான் மதில்” என்று பெயர். இம்மதிற்சுவர் 32 அடி உயரமும் 8000 அடி நீளமும் உடையது. இறைவன், சித்தராக வந்து, திருநீற்றையே கூலியாகக் கொடுத்து இம்மதிற் சுவரைக் கட்டியதாக வரலாறு. இத்திருக்கோயிலுக்கு வள்ளல் பச்சையப்பர் செய்துள்ள நிபந்தங்கள் பற்றிய செய்தி பொறித்த ஒரு கல்(வெட்டு) கோயிலுக்கு வெளியே இராசகோபுரத்தையொட்டி நடப்பட்டுள்ளது. இதைப் பாதுகாப்பது அவசியம். காலப்போக்கில் இக்கல் காணாமற் போய்விடின் ஓர் அரிய செய்தி மறைந்து போய்விடும். எனவே இக்கல்லை உட்புறத்தில் எங்கேனும் நட்டுப் பாதுகாப்பு செய்ய வேண்டுவது |