பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 41


அஞ்சல் முகவரி :-

  அ/மி. வாலீஸ்வரர் திருக்கோயில்
  குரங்கணில் முட்டம் கிராமம்
  தூசி அஞ்சல் - 631 703
  செய்யாறு வட்டம்.
  திருவண்ணாமலை மாவட்டம்.

7. மாகறல்.

     தொண்டை நாட்டுத் தலம்.

     காஞ்சிபுரத்திலிருந்து செல்லலாம். காஞ்சிபுரம் - உத்திரமேரூர்  (வழி) ஓரிக்கை - பேருந்துப் பாதையில் உள்ள தலம். காஞ்சிபுரத்திலிருந்து இவ்வூர்
வழியாக உத்திரமேரூருக்குப் பேருந்து செல்கிறது. செய்யாற்றின்   கரையில்
உள்ள ஊர். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.   சிறிய    அழகான
கோயில். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

     இந்திரன் வழிபட்ட தலம். இராசேந்திரசோழனுக்கு, இறைவன்  பொன்
உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து  பின்  சிவலிங்க
வடிவமாக வெளிப்பட்ட தலம். சிவலிங்கத் திருமேனி உடும்புபோலச் சிறுத்து
உள்ளது. சுயம்பு மூர்த்தி. ஆவுடையார்தான் கட்டப்பட்டது. இறைவன் -
திருமாகறலீஸ்வரர்.

     இறைவி - திரிபுவனநாயகி, புவனநாயகி, இறைவனுக்கு வழங்கப்படும்
வேறுபெயர்கள் : அடைக்கலங்காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர்,
பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங் காத்தவர்,
பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் முதலியன. மாகறம்-உடும்பு. ‘மாகறலீஸ்வரர்’
என்ற பெயரே மக்கள் வழக்கில் உள்ளது.   தீர்த்தம் - அக்கினி  தீர்த்தம்.
தலமரம் - எலுமிச்சை. மாகறன், மலையன் என்னும் இரு அசுரர்கள் வழிபட்ட
தலம். இத்தலத்திற்குரிய தல விநாயகர், பொய்யா விநாயகர் -ஊருக்கப்பால்
செய்யாற்றின் கரையில் உள்ள மண்டபத்தில் இவர் உள்ளார்.

     இங்குத்  திங்கட்கிழமை  தரிசனம்  விசேஷமாகச்  சொல்லப்படுகிறது.
மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு அங்கப்பிரதட்சணம்  செய்யும்  வழக்கம்
முன் காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.