சம்பந்தர் பாடல் பெற்றது. இப்பதிகம் ‘வினை நீக்கும் பதிகம்’ என்னும் சிறப்புடையது. இத்தலம் தொடர்பாகக் கிடைத்த செவி வழிச்செய்தி வருமாறு : இராசேந்திர சோழ மன்னனுக்கு நாடொறும் இங்கிருந்து, கோயிலில் இருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு, அது வழியில் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டுப் பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. காலப்போக்கில் இக்கோயிலில் பணிசெய்தோர் இம்மரத்தைத் தீயிட்டு அழித்துவிட்டனர். பலாப்பழம் வாராதது அறிந்த மன்னன் ஆள் அனுப்பிச் செய்தியறிந்தான் ; அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச்சென்று, மறுநாள் பொழுது விடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் (திருத்தணிக்கும் திருவள்ளூருக்கும் இடையில்) ‘விடிமாகறல்’ என்று வழங்கப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் நம்மை, புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியிருந்து வரவேற்கிறது. உட்புகுந்தால் விசாலமான இடம். கோயில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. துவஜஸ்தம்பம் - அதன் முன்னால் உயர்ந்த பலிபீடம். பலி பீடத்தின் முன் விநாயகர் காட்சி தருகிறார். ஆம்! கொடிமரத்து விநாயகர் அவரே. இடப்பக்கத்தில் திருக்குளம். சுவாமி எழுந்தருளும் நாற்கால் மண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரம் விசாலமானது. வலமாக வந்து படிக்கட்டுகளையேறி, விநாயகரையும், மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கியவாறே, துவாரபாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். வலமாக வரத்தொடங்கும் நாம் இடப்பால் உள்ள ஆறுமுகப் பெருமானை மயிலேறிய மாணிக்கத்தைத் தரிசிக்கலாம். பக்கத்தில் நால்வர் பெருமக்கள் தனியே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இப்பிரதிஷ்டை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழா ஆண்டுப் பணிகளுள் இடம் பெற்ற 1985 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வலமாக வரும் நாம் கருவறையிலுள்ள கோஷ்டமூர்த்தங்களை - விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, |