பக்கம் எண் :

410 திருமுறைத்தலங்கள்


     கோயிலின் அடிவாரத்தில் போக முனிவர் கோயில் உள்ளது.
செங்குத்தான படிகள்- அதிக எண்ணிக்கையில், ஏறிச் செல்வதற்கு வசதியாக
ஓரளவிற்குப் பரப்பப் பட்டுள்ளன. கோயிலுள் நுழையும் போது
தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. வலமாக
வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி
அமைப்பைக்காண முடிகிறது. உள்ளே நவக்கிரக, நால்வர் சந்நிதிகள்
உள்ளன. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில் விமானங்கள்,
துவஜஸ்தம்பங்கள் உள்ளன. இவை கோயிலுள்- மண்டபத்துள் சுவாமி,
அம்பாள் முன் நாட்டப்பட்டுள்ளன. இவற்றின் முனைப்பகுதி கல்
மண்டபத்தைத் துளையிட்டு மேலே செலுத்தப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில்
புதியதாகச் செய்து வைத்த அமைப்பாக இருக்கலாம். துவஜஸ்தம்பத்தின்
முன் விநாயகர் உள்ளார். பால தண்டாயுதபாணி சந்நிதி தனியே உள்ளது.

     சிவராத்திரியன்று அல்லது முன்நாள்களில் சூரிய ஒளி லிங்கத்தின்
மீது படுகின்றது. சுவாமிக்குத் தீபாராதனை செய்யும் போது தீபஒளி
இலிங்கத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஈங்கோய்மலைக் கோயில்
வாட்போக்கிமலை கடம்பத்துறையைப் பார்க்கிறது; கடம்பந்துறைக் கோயில்
ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம் மூன்று மலைகளும்
சோமாஸ்கந்த வடிவில் உள்ளதென்பர்.

     ஒரே நாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பந்துறை)
நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும்
தரிசித்தல் விசேஷமானது என்பர். ‘காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர்,
அந்தி ஈங்கோய்நாதர்’ என்னும் வழக்குள்ளது. இவ்வாறு ஒரே நாளில்
தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச்
சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

 “வினையாயின தீர்த்(து) அருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை
  நனையார் முடிமேல் மதியஞ் சூடுநம்பா நலமல்கு
  தனையார் கமல மலர் மேல் உறைவான் தலையோ(டு) அனல் ஏந்தும்
  எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.”
                                                 (சம்பந்தர்)

                                          - நீச்சறியா
   தாங் கோய்மலைப் பிறவியார் கலிக்கோர் வார்கலமாம்
   ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே.             (அருட்பா)