பக்கம் எண் :

412 திருமுறைத்தலங்கள்


அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
அடிவாரத்தில் உள்ள பிராதன விநாயகரைத் தரிசித்து ஏறத்
தொடங்கவேண்டும். அடிவாரத்தில் நால்வர் சந்நிதிகள், அலங்கார
வளைவுள்ளது. ஏறுதற்குச் சற்று உடற்சிரமம்தான். 750 படிகளைத் தாண்டிய
பின்பு “உகந்தாம் படி” வருகிறது. அங்கு விநாயகர் சந்நிதியும், சுரும்பார்
குழலி சந்நிதியும் உள. அவற்றை வலமாகவந்து மேலேறிச் சென்றால்
வாட்போக்கிநாதர் சந்நிதியை அடையலாம். கோயிலினுள் நுழையும்போது
நம்மை முதலில் வரவேற்பது தட்சிணாமூர்த்தி சந்நிதிதான். முகத்தில் தவழும்
(இம்மூர்த்தியின்) அழகை, புன்சிரிப்பைக் கண்டதும், இதுவரை ஏறிவந்த
உடற்சிரமம் அனைத்தும் இல்லாமற் போகின்றது. அவ்வளவு அருமையான
புன்சிரிப்பு. தரிசித்து உள்ளே நுழைந்தால் ரத்னகிரீசரைக் காண்கிறோம்.
ரத்னகிரீசர், மாணிக்க ஈசர் ஆகிய இப்பெயர்கள் சுந்தரரால் பாடப்பட்ட
பெயர்களாம். மன்னன் வழிபட்டதால் ராஜலிங்க மூர்த்தி என்ற பெயருண்டு.
சிவராத்திரி நாள்களில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு
நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.
சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி
உள்ளது.

     கோயிலுள் நடராஜர், சிவகாமி சந்நிதிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும்,
வைரப்பெருமாள் சந்நிதியும் உள்ளன. இப்பெருமானுக்கு நாடொறும்
அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு
உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. இன்றும் இப்பொறுப்பை
“பன்னிரண்டாம் செட்டியார்” என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள்
மூலம் நடத்துவிக்கின்றனர். சுவாமிக்கு அணிகலன்கள் நிரம்ப உள்ளன.
அவைகளும், மற்றும் தேர், வாகனங்கள் முதலிய அனைத்தும் இம்மரபினர்
பொறுப்பிலேயே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல்நாளில்
சுவாமிக்கு எல்லா நகைகளையும் சார்த்தி அலங்காரம் செய்கிறார்கள்.

     சித்திரைமாதம் அஸ்த நட்சத்திரம் தொடங்கிப் பத்து நாள்களுக்குப்
பெருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகைச் சோமவாரங்கள் விசேஷம்.
அருணகிரிநாதர் “பத்தியால் யானுனைப் பலகாலும்” என்று தொடங்கிப்
பாடும் திருப்புகழில் “ஒப்பிலா மாமணிக்கிரிவாசா” என்று இத்தலத்தைக்
குறப்பிடுகின்றார்.

     இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த
காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது
செவிவழிச்செய்தி. “காகம் அணுகாமலை” என்பர்.