முன்மண்டப வாயில். மேலே ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆனது உள்ளது. உள்கோபுரம் ஏழு நிலைகளையுடையது. இடப்பால் குளம் உள்ளது. வலப்பால் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர். அடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே மூலவர் சந்நிதி தெரிகின்றது. கிழக்கு நோக்கியது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், அறுபத்து மூவரும் (திருமேனிகளும்) உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, மயிலேறிப் பன்னிரு கையும் கொண்டு திகழும் சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார். கோஷ்ட மூர்த்தமாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோற்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் - பரந்த கல்லாலமர வேலைப்பாடு. நடராசர் சந்நிதி உள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உள்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன. வைகாசி விசாகத்தில் பத்துநாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் பின்பு நாட்டுக்கோட்டை நகரத்தாரின் திருப்பணியும் பெற்றது. கல்வெட்டில் இத்தலம் “உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை” என்று குறிக்கப்படுகின்றது. இறைவன் பெயர் “பராய்த்துறை மகாதேவர்” என்றும், “பராய்த்துறைப் பரமேஸ்வரன்” என்றும் குறிக்கப்படுகின்றது. |