பக்கம் எண் :

418 திருமுறைத்தலங்கள்


121/4. கற்குடி

உய்யக்கொண்டான் மலை, உய்யக்
கொண்டான் திருமலை

     சோழநாட்டு (தென்கரை)த்தலம்.

     தற்போது ‘உய்யக்கொண்டான்’ மலை என்று வழங்குகிறது. திருச்சிக்குப்
பக்கத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. இதற்கு
‘உய்யக் கொண்டீஸ்வரம்’ என்று பெயர்.

     இறைவன் கல்லில்-மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர்
பெற்றது. நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப் பெற்ற கோயில்.
இப்பகுதிக்கு ‘நந்திவர்ம மங்கலம்’ என்னும் பெயருண்டு. மார்க்கண்டேயரைக்
காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள்புரிந்த தலம். இவ்வரலாற்றுச்
சிற்பம் கோயிலின் வாயில் முகப்பில் மேலே சுதையால் ஆக்கப்பட்டுள்ளது.

     கரன் வழிபட்டதலம். வெளிச்சுற்றில் இச்சிவலிங்கம் ‘இடர்காத்தார்’
என்னும் பெயருடன் திகழ்கின்றது. நாரதர், உபமன்யுமுனிவர்,
மார்க்கண்டேயர், கரன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டதலம்.

     இறைவன் - உஜ்ஜீவநாதஸ்வாமி, உச்சிநாதர், முக்தீசர், கற்பகநாதர்.
     இறைவி - அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை) பாலாம்பிகை.
     தலமரம் - வில்வம்

     தீர்த்தம் - (1) பொன்னொளி ஓடை (2) குடமுருட்டி
              
(3) ஞானவாவி (4) எண்கோணதீர்த்தம்
              (5) நாற்கோணதீர்த்தம்

என்பன. இவற்றுள் முதல் 2 தீர்த்தங்கள் வெளியிலும் பின் 3 தீர்த்தங்கள்
கோயிலிலும் உள்ளன. (நாற்கோணக் கிணற்று நீரே அபிஷேகம்
முதலியவைகளுக்குக் கொண்டு வரப்படுகிறது.)

     இங்குக் குறிக்கப்படும் ‘குடமுருட்டி’ என்பது தஞ்சை மாவட்டத்தில்
ஓடும் ஆறு அன்று. இது வேறு. இது சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி
என்று சொல்லப்படுகிறது. கல்வெட்டில் இந்நதி, வைரமேகவாய்க்கால் என்று
குறிக்கப்படுகின்றது. இது காவிரியின் கால்வாய்களில் ஒன்று. ‘ஞானவாவி’க்கு
முத்திதீர்த்தம் என்றும் பெயர்.

     மூவர் பாடல் பெற்ற சிறப்புடைய தலம்.