கோயில் மலை மேல் உள்ளது. அழகான கற்கோவில். கிழக்கு நோக்கிய முகப்பு வாயில். திருக்குளம் (ஞானவாவி) படிகள் செல்லும்போது இடப்பால் விநாயகர் உள்ளார். மேலேறிச் சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. அதன் முன்பு - மார்க்கண்டனைக் காப்பதற்காக - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டுநீங்கி வந்து நின்ற, சுவாமியின் பாதம் உள்ளது. படிகளேறி உட்சென்றால் முதலில் ‘அஞ்சனாட்சி’- அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி - பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. இதனால் புதிய அம்பாளை பிரதிஷ்டை செய்துள்ளனர். எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இரு அம்பாளுக்கும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது. புதிய அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. “பாலாம்பிகை”. சண்முகர் சந்நிதி அழகானது. உள் நுழைந்ததும் நேரே கோஷ்ட தட்சிணா மூர்த்தி தரிசனம். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனிபகவான் சந்நிதிகளும் உள. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். நவக்கிரக சந்நிதி உள்ளது. மூலவர் - சுயம்பு - மேற்கு நோக்கிய சந்நிதி - சதுர ஆவுடையார். மூலவர் அழகான தோற்றம். மனம் ஒன்றிச் சிந்திக்க, நிறைவு உண்டாகின்றது. மூலவருக்கு நேரே உள்ள மண்டபத்தில் நடராஜ சந்நிதி உள்ளது. பக்கத்தில் பிட்சாடனர், சந்திரசேகரர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் முதலிய உற்சவத் திருமேனிகள் அழகாக உள்ளன. இங்குப் பௌர்ணமி விசேஷம். பங்குனியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. தைப்பூசத்தில் சந்திரசேகரர் சோமரசம் பேட்டைக்கு எழுந்தருளுகின்றார்.
கல்வெட்டில் ‘நந்திவர்ம மங்கலம்’, ‘ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்’ என்று இவ்வூர் குறிக்கப் பெறுகின்றது ; சுவாமியின் பெயர் ‘உய்யக் கொண்டநாதர்’ எனப்படுகின்றது. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின் போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியது என்ற செய்தியை ‘கெஜட்’ வாயிலாக அறிகிறோம். |