பக்கத்தில் யானையைக் கோழி கொத்துகின்ற மிக அழகான சிற்பம் உள்ளது- காணத் தகுந்த அற்புதக் காட்சி. இங்குள்ள தீர்த்தம் - சிவதீர்த்தம். இது கோயிலுள் உள்ளது. இத் தீர்த்தத்தின் சிறப்பு வருமாறு :- “திருப்பராய்த்துறையில் இருந்து வாழ்ந்து வந்த அன்பரொருவர் திருநீற்றைப் பெற்று வாயால் ஊதிய பாவத்திற்காகக் காட்டுப் பன்றியாய்ப் பிறந்து, பல்காலும் திரிந்து கடைசியில் வில்வவனமாகிய இத்தலத்தை அடைந்து, அழிக்கத் தொடங்கியபோது வேடர்கள் அதுகண்டு துரத்த அப்போது அப்பன்றி ஓடமாட்டாது இங்குள்ள சிவதீர்த்தத்தில் வீழ்ந்தது. இத் தீர்த்தத்தில் வீழ்ந்தமையால் அப் பன்றி பேறு பெற்று உய்ந்தது. அத்தகைய உயர்ந்த தீர்த்தம் இத் தீர்த்தமாகும்.” இச்சிறப்பினை விளக்கும் சிற்பம், இத் திருக்குளத்தில் இறங்கும் போது வலப்புறத்தில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. சோழ மன்னர்களின் திருப்பணியும், அடுத்து நகரத்தாருடைய திருப்பணிகளும் பெற்றுச் சிற்பக் கலையழகுடன் திகழும் உறையூர்த் தரிசனம் உள்ளத்துக்கு உவப்பைத் தருவதில் மேலோங்கி நிற்கின்றது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இத்தலத்திற்குத் தலபுராணம் பாடியுள்ளார். “சாந்தம் வெண்ணீறெனப் பூசி வெள்ளஞ்சடைவைத்தவர் காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம் ஆய்ந்து கொண்டாங்கறியந் நிறைந்தார வரார்கொலோ வேந்தன் மூக்கிச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.” (சம்பந்தர்) - சிற்சுகத்தார் பிற்சநந மில்லாப் பெருமைதரும் உறையூர்ச் சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :-
அ/மி. பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில் உறையூர் & அஞ்சல் - 620 003. திருச்சி. |