123/6. திரிசிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி | சோழ நாட்டு (தென்கரை)த் தலம்.
திருச்சிராப்பள்ளி - திருச்சி என்றழைக்கப்படும் இத்தலம் தமிழகத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாகும். புகைவண்டி சந்திப்பு நிலையம். தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து விரைவுப் பேருந்துகள் மூலமாகவும், புகைவண்டிகள் மூலமாகவும் இந்நகரையடைலாம். சிவில் விமான நிலையமும் உள்ளது. காவிரிக்கரையில் உள்ள ஊர். இறைவன் - மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர் இறைவி - மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை தீர்த்தம் - காவிரி சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம். எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார். திரிசிரன் (மூன்று தலைகளைக் கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது ‘திரிசிராப்பள்ளி’ என்று பெயர் பெற்றது. “முச்சென்னி மடங்கலேறு அனையான் நாமவரை இது” - என்பது திருவிளையாடற்புராணம். இத் தலத்திற்குத் ‘தென் கயிலாயம்’ (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு. பிரமன், இந்திரன், சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன், சாரமாமுனிவர், மௌனகுரு, தாயுமானவர் முதலியோர் வழிபட்ட தலம். தாயுமானவர் திருக்கோயில் மலைமேல் நடுவிடத்தில் உள்ளது. இவ்விடத்திற்கு மலைக்கோட்டை என்று பெயர். திருச்சி என்றாலே மலைக்கோட்டையும், இம்மலையின் உச்சியில் அமர்ந்துள்ள ‘உச்சிப் பிள்ளையார்’ கோயிலும் தான் நினைவுக்கு வரும். இம்மலைக் கோட்டை நகரின் நடுவே அமைந்துள்ளது. மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளது. அருமையான - அற்புதமான விநாயகர். உண்மையிலேயே மாணிக்கமான விநாயகர் முன் நிற்கும்போது நம்மை நாம் மறக்கிறோம். மாணிக்க விநாயகரைத் தொழுது வலம் வந்து படிகளேறத் தொடங்க வேண்டும். சிராப்பள்ளிக் குன்றுடையானைக் காணும் ஆர்வங் |