பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 425


கொண்டு ஏறும் நம்முன் வழியில் வலப்பால் தருமையாதீனத்தின் ஸ்ரீ மௌன
சுவாமிகள் கட்டளை மடம் வருகின்றது. மடத்தின் முகப்பில் ‘முத்துக் குமார
சந்நிதி’. கைதொழுது மேலேறினால் நூற்றுக்கால் மண்டபத்தைக் காணலாம்.
தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர்
திருக்கோயில் இடப்பால் உள்ளது. வலப்பால் உச்சிப்பிள்ளையார்
கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை செல்கின்றது.

    திருக்கோயிலுள் விசாலமான முன் மண்டபம் உள்ளது. உயரமான
வரிசையில் அறுபத்துமூவர் மூலத் திருமேனிகளும் ; வாயில் முகப்பில்
கம்பத்தடி விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகளும் உள்ளன. உள்ளே சென்று
வலம்வர அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகளும் ‘செவ்வந்தி விநாயகரும்’
காட்சி தருகின்றனர். மலையடிவாரத்திலிருந்து 258 படிகளைக் கடந்தேறிய
பிறகு தாயுமானவப் பெருமானின் சந்நிதியை அடைகிறோம். முகப்பில்
உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தெய்விக
மணங்கமழும் திவ்வியமான சந்நிதி. மேற்கு நோக்கியது.

    மூலவர் - பெரிய பருத்த சிவலிங்கத் திருமேனி. திருநீற்றுப் பட்டையுடன்
கூடிய கம்பீரமான காட்சி - நன்றுடையான், தீயதில்லான், சிராப்பள்ளிக்
குன்றுடையான். இவர் பெயர் கூறித்தொழும் உள்ளம் குளிருமல்லவா! ஆம்!
ஒன்றித்தொழ உண்மையிலேயே நெஞ்சம் குளிர்கின்றது. ஞானசம்பந்தர்
பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. பிராகாரத்தில் இறைவனின்
பல்வேறு மூர்த்தங்கள் சுவரில் வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளன.
சண்டேஸ்வரரைத் தொழுது வெளியே வந்து அம்பாள் சந்நிதியை
அடையலாம். ‘மட்டுவார்குழலி’ நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிக்
காட்சி தந்தருளுகின்றாள். பிராகாரத்தில் அருட்சக்திகளின் மூலத்
திருமேனிகள் உள்ளன. நவக்கிரகங்களை வழிபட்டு மனநிறைவுடன்
வெளியே வந்து கொடிக் கம்பத்தினிடத்தில் வீழ்ந்து வணங்கி, பழைய படியே
படிகள் இறங்கி, சென்ற வழியே திரும்பி வரவேண்டும். தாயுமானவர்
இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌன சுவாமிகள் ஆவார்.
சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப்
புராணம்) பாடியுள்ளார்.

    “நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளே(று)
     ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
     சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
     குன்றுடையானைக் கூறஎன் உள்ளங்குளிரும்மே.”    (சம்பந்தர்)