பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 427


     திருமாலும், பிரமனும், நைமிசாரண்ய ரிஷிகளும் வழிபட்ட தலம். தென்
கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர். இந்திரனும் தேவர்களும் எறும்பு
வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.

    இறைவன் - பிப்பிலிகேஸ்வரர், எறும்பீஸ்வரர், எறும்பீசர்,
              மதுவனேஸ்வரர், மணிகூடாசலபதி, மாணிக்க நாகர்.
              (பிப்பிலி - எறும்பு)
    இறைவி - சௌந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி
                        
(சுகந்த குழலேஸ்வரி), இரத்தினம்பாள்.
    தலமரம் - வில்வம்
    தீர்த்தம் - பிரம தீர்த்தம் (எதிரில் உள்ளது).

    
அப்பர் பாடல் பெற்ற தலம்.

    கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், ‘திருமலையாழ்வார்’ என்றும்,
‘திருவெறும்பியூர் உடைய நாயனார்’ என்றும் குறிக்கப் பெற்றுள்ளது.
முகப்பில் பக்கத்தில் செல்வ விநாயகர் சந்நிதி உள்ளது. வாயில் கல்
மண்டபம்.

    
கிழக்கு நோக்கிய வாயில் வழியே 125 படிகளேறிச் செல்ல வேண்டும்.
மேலே சந்நிதி நுழைவு கிழக்கு நோக்கியுள்ளது. கல்லாலான கருவறைக்
கட்டடம். முன்னால் செப்புக் கவசமிட்ட கொடிக்கம்பம் உள்ளது. சுவாமி
கிழக்கு நோக்கியுள்ளார்.

    
மலைமீது உள்ளும் வெளியுமாக இருபிராகாரங்கள் உள்ளன.

    
உள்பிராகாரத்தில் நுழைந்தால் நேரே மூலவர் சந்நிதி. வலமாக வரும்
போது நால்வர் பிரதிஷ்டை, சப்தமாதாக்களின் உருவங்கள், விநாயகர் சந்நிதி,
காசி விசுவநாதர், ஆறுமுகர், கஜலட்சுமி முதலியவை உள்ளன.

     கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி,
இலிங்கோற்பவரிடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை
ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நவக் கிரக சந்நிதியில்
சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது. பைரவர்
உள்ளார். உள் பிராகாரத்தில் நால்வர் சந்நிதியை அடுத்துள்ள வாயில்
வழியே சென்று பார்த்தால் சுரங்கப் பாதை ஒன்று உள்ளது; மேலே
மூடப்பட்டுள்ளது; படிகள் தெரிகின்றன. திருச்சி மலைக்கோட்டையிலிருந்து
தப்புவதற்கான வழியாக இது இருக்கலாம் என்பது செவிவழிச்செய்தி.