மூலவர் வாயிலின் முன்னால் ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் வேலவரும் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி வடபால் சாய்ந்துள்ளது; மேற்புறம் சொரசொரப்பாகவுள்ளது. இது பற்றிச் சொல்லப்படும் தலவரலாறு:- “தாருகாசூரனை” அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அணுகினர். அவர் சொல்லிய வண்ணம் இந்திரனும் தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்க்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங் கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார்; அவைகள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார்” என்று சொல்லப்படுகிறது. ‘திரிசிரன்’ திருச்சியில் வழிபட்டதுபோல அவனுடைய சகோதரன் ‘கரன்’ என்பவன் எறும்பு உருக்கொண்டு இங்கு வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள கல் தூண்கள் சிற்ப வேலைப் பாடமைந்தவை. கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன. பழைய அம்பாள் கோயில், கோயிலுக்கு வெளியே முகலாயப் படையெடுப்பால் உண்டான இடிபாடுகளுடன் காணப்படுகிறது. மொட்டையாக நின்றிருக்கும் தூண்களேயன்றி, கோயில் முழுவதுமாக அழிந்துள்ளது. அம்பாளும் பின்னப்பட்டுள்ளது. ஆதலின் வேறொரு புதிய அம்பாள் திருமேனி கோயிலுக்குள்ளே வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நிதியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது ; தெற்கு நோக்கிய சந்நிதி நின்ற திருக்கோலம். கோயிலுள் தலப்பதிகங்கள் கல்லிற் பொறித்துப் பதித்து வைக்கப் பட்டுள்ளன. வைகாசி மாதத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. கல்வெட்டில் இத்தலம் “ஸ்ரீ கண்டசதுர்வேதி மங்கலம்” என்று குறிக்கப்படுகின்றது. ‘எறும்பியூர்த் தலபுராணம்’ உள்ளது. கி.பி. 1752ல் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது. தற்போது இப்பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை, கொதிகலன் தொழிற்சாலை, தொழிற் பயிற்சி நிலையம் முதலியவை உள்ளன. |