பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 443


    இறைவன் - ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர்,
                              சோற்றுத்துறை நாதர்
    இறைவி - அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
    தீர்த்தம் - காவிரி

    (அடியார்கள் பசிப்பிணியால் வருந்திய போது இறைவன் அக்ஷயபாத்திரம்
வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத்
தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.)

    மூவர் பாடல் பெற்றது.

    கோயிலின் வெளிச் சுற்றில் அம்பாள் கோயில் உள்ளது. மூன்று நிலை
ராஜகோபுரத்தின் வலப்பால் விநாயகரும் இடப்பால் முருகனும் உள்ளனர்.
முன் மண்டபத்தில் நடராசசபை உள்ளது. உற்சவ மூர்த்தங்கள் இங்குப்
பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தலப் பதிகக் கல்வெட்டு உள்ளது. அர்த்த
மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
இத்தலத்திற்குச் சிறப்புதரும் மூர்த்தி இதுவே. தனிக்கோயில். அடுத்து
இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட
சிலையும் உள்ளது.

    அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வலப்பால் கிழக்கு நோக்கியுள்ளது.
திருமணக்கோலம். முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல
திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள்
இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும்,
விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத்
தெரிவிக்கின்றன.

   
“துடிகளோடு முழவம் விம்மவே
     பொடிகள் பூசிப் புறங் காடரங்காகப்
     படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
     அடிகள் சோற்றுத்துறை சென்றடைவோமே.”      (சம்பந்தர்)

    “நம்பனே நான்மறைகள் ஆயினானே
        நடமாடவல்லானே ஞானக்கூத்தா
    கம்பனே கச்சிமா நகருளானே
        கடிமதில்கள் மூன்றினையும் பொடியாஎய்த
    அம்பனே அளவிலாப் பெருமையானே
       அடியார்கட்கு ஆரமுதே ஆனேறுஏறும்
    செம்பொனே திருச்சோற்றுத் துறையுளானே
       திகழொளியே சிவனே உன் அபயம் நானே.”    (அப்பர்)