சிவலிங்கமும் மரப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்து, பால சுப்பிரமணியர், கஜலட்சுமி, நடராசர் சந்நிதிகள் உள. நவக்கிரக சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது. சிவலிங்கத் திருமேனி சிறியதாக வுள்ளது. சதுர ஆவுடையார். முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலத்திருமேனி சுயம்பு. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோற்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. இத்தலபுராணம் சமஸ்கிருதத்தில் “தக்ஷிண குடித்வீப மஹாத்மியம்” என்ற பெயரில் உள்ளது. திரு.வி.பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள “சுயம்பூதேஸ்வரர் புராணத்தை” - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது. “கானலைக்கும் மவன் கண் ணிடந்தப்பநீள் வானலைக்குந் தவத்தேவு வைத்தானிடம் தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை தேனலைக்கும் வயல்தென் குடித் திட்டையே.” (சம்பந்தர்) - கோதியலும் வன்குடித்திட்டை மருவார் மருவு திருத் தென்குடித் திட்டைச் சிவபதமே. (அருட்பா) “தென்குலத் திட்டையினில் பேருல நாயகிக்குப் பங்கு கொடுத்த பசுபதியே” (உமாபதிசிவம்) |