பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 449


அஞ்சல் முகவரி :-

     அ/மி. வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
     திட்டை - பசுபதிகோயில் அஞ்சல் - 614 206
     தஞ்சை மாவட்டம்.

133/16. திருப்புள்ளமங்கை

பசுபதி கோயில்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையில் பசுபதிகோயில்
புகைவண்டி நிலையம். நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் ஊர்
உள்ளது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில்
ஐயம்பேட்டையைத் தாண்டி, மாதாகோயிலிடத்தில் வலப்புறமாகப் பிரியும் -
கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் பசுபதி கோயிலை
அடையலாம். தஞ்சையிலிருந்து பசுபதி கோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு.
திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.
ஊர்ப்பெயர் பண்டைநாளில் ‘புள்ள மங்கை’ என்றும், கோயிற் பெயர்
‘ஆலந்துறை’ என்றும் வழங்கப்பெற்றது.

     “புள்ள மங்கை ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின்”
என்னும் பதிகத் தொடர் இக்கருத்தைத் தெரிவிக்கின்றது. கல்வெட்டுக்களில்
‘ஆலந்துறை மகாதேவர் கோயில்’ என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது.
இன்று ஊர்ப் பெயர் மாறி ‘பசுபதி கோயில்’ என்று வழங்கப்படுகிறது.
‘புள்ளமங்கை’ என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள்
இருக்கின்றன. திருச்சக்கரப் பள்ளியில் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும்
ஒன்று.

     குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆல
மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின்
‘ஆலந்துறை’ என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.

     அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது
செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி. பசுபதி கோயில் - பெரிய
ஊர். சோழர் காலச் சிற்பச் சிறப்புக்களுடைய கோயில்.

தலம் - 29