பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 45


8. திருவோத்தூர்

திருவத்திபுரம், செய்யாறு.

     தொண்டை நாட்டுத் தலம்.

     காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மக்கள் வழக்கில் செய்யாறு.
திருவத்திபுரம்,   திருவத்தூர்     என்றெல்லாம்   வழங்கப்படுகின்றது.
காஞ்சியிலிருந்து   அடிக்கடி   பேருந்து   வசதி   உள்ளது. வந்தவாசி,
திருவண்ணாமலை,   போளூர்,  ஆரணி  முதலிய  ஊர்களில் இருந்தும்
இவ்வூருக்கு வரலாம். பேருந்து நிலையம் உள்ள பகுதி செய்யாறு. கோயில்
சற்றுத் தள்ளி ஊருக்குள் உள்ளது. அப்பகுதி திருவத்திபுரம் என்றழைக்கப்
படுகிறது.

     ஓத்து வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின்
ஓத்தூர் - ‘திரு’  அடைமொழி  சேர்ந்து  ‘திருஓத்தூர்’  -  திருவோத்தூர்
என்றாயிற்று. கோயில் செய்யாற்றின்  கரையில்  உள்ளது. சம்பந்தர் பாடல்
பெற்ற தலம். இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான தலம்.
ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் பனை மரங்கள் உள்ளன.

     இறைவன் - வேதபுரீஸ்வரர், வேதநாதர்.
     இறைவி - பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.

     தலமரம்- பனை. முகப்பு வாயில் கிழக்கு நோக்கி ஆறு நிலைகளுடன்
காட்சி தருகிறது - சுதை   வேலைப்பாடுகள்.  ஊரின்  நடுவில்   கோயில்
இருப்பதால், சுற்றிலும் கடைகள் உள்ளன.   உள்நுழைந்தால்   விசாலமான
இடம். வலப்பக்கம் ஒரு மண்டபம்,   ஒருகாலத்தில்   வாகன  மண்டபமாக
இருந்திருக்கக்கூடும். இடப்புறம் திருக்குளமும் அடுத்து நந்தவனப் பகுதியும்
உள்ளன. உயரமாக அமைந்த பலிபீடம். நந்தி  சுவாமியை  நோக்கியிராமல்
முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இது குறித்துத் தலபுராணத்தில்
சொல்லப்பட்டுள்ள வரலாறு இதன் இறுதியில்  தரப்பட்டுள்ளது.   முன்னால்
உள்ள மண்டபத்தின்மீது புதிதாகச் சுதை வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள்
- முருகன், விநாயகர், நடராஜர் - ஞானசம்பந்தரும், பனைமரமும் உள்ளன.
ஆலயத்துள் நுழைந்தால் வலப்பக்கம் அம்பாள்  சந்நிதி.  நேர்   எதிரில்
இடப்பக்கம் அம்பாளுக்குரிய சிம்மம், கொடிமரம் உள்ளன.