இவற்றுக்குப் பக்கத்தில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன. இடப்பக்கமாக வெளிப்பிரகாரத்தில் வலம் வரும்போது, உற்சவ மூர்த்தி மண்டபம் உள்ளது. தலமரமான, 5 பனை மரங்கள் உயர்ந்தோங்கி உள்ளன. சிவலிங்கமும் உள்ளது. பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திரு ஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒரு கையில் மழுவுடன் ; ஒரு கையை மடக்கிய காலின் தொடைமீது வைத்தவாறு காட்சி தருகின்றார். தீர்த்தக்கிணறு உள்ளது. யாகசாலையும், அலங்கார மண்டபமும் உள்ளன. வெளிப்பிராகார வலம் முடித்து, படிகள் ஏறினால் விநாயகரும், முருகனும், துவார பாலகர்களும் தரிசனம் தருகின்றனர். கோடியில் உயரமான பீடத்தில் நாகலிங்கம் உள்ளது. உள்ளே நுழைவோம். இரு புறங்களிலும் உற்சவத் திருமேனிகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் வலம் வரும்போது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகள் - சப்தமாதாக்கள் தரிசனம். கோஷ்ட மூர்த்தமாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். பெருமாள் கோயிலொன்று புதிதாகச் சிறியதாகத் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. சண்முகர் வள்ளி தெய்வயானையுடன் கூடியுள்ளார். பைரவர், சூரியர் சந்நிதிகள் உள்ளன. உள்ளே கருவறையில் வேதபுரீஸ்வரர் - சிவலிங்கத் திருமேனி, கிழக்கு நோக்கிய சந்நிதி. மேலே விதானம் உள்ளது. சதுர ஆவுடையார். மூவரைத் தரிசித்து வெளியே வந்து இடப்பால் உள்ள வழியாக வெளிச்சென்று, சண்டேஸ்வரரைத் தரிசித்து வெளி வரலாம். பாலகுஜாம்பிகை தரிசனம் தனிக்கோயில். பிரகாரம் உள்ளது. நின்ற திருக்கோலம். அபய, வரம் உள்ளிட்ட நான்கு திருக்கரங்கள், மிகப் பழைய திருமேனி. வணங்கி வெளியில் வரும்போது இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. இத்தலத்துப் பெருவிழா தை மாதத்தில் நடைபெறுகிறது. |