கோயிலுக்கு எதிரில் வெளியே தேர் மேடை சிதைந்துள்ளது. சிறிய தேர் உள்ளது. கல்வெட்டில் இறைவன் ‘ஓத்தூர் உடைய நாயனார்’ என்று குறிக்கப்படுகின்றார். இராசாதிராசன், குலோத்துங்கன், இராசேந்திரன், விக்ரம சோழன் முதலியோர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் இக்கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றன. * நந்தி பற்றியத் தலபுராணச் செய்தி வருமாறு : விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வணங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் ‘எங்ஙனம் போரிடுவேன்’ என்று அஞ்சியபோது, ‘நந்தி உனக்குப் படைத் துணையாக வருவார். நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக’ என்றார். மேலும், “நாம் கூறியதில் உன் மனத்திற் சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோம். நீ போய்ப்பார். அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்’, என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்குப் படைத் துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான். (திருவோத்தூர்த் தலபுராணம் - தொண்டைமானுக்குப் படைத் துணைபோன சருக்கம் - இயற்றியவர் : கருணாகரக் கவிராயர்) “பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதார் இல்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளிமழுவாள் அங்கைக் கூத்தீரும்ம குணங்களே.” “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் அரும்பு கொன்றையடிகளைப் பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே.” (சம்பந்தர்) |