பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 455


வலப்பால் சர்வசித்தி விநாயகர் தரிசனம். வெளிப்பிராகாரம் நந்தவனப் பகுதி.

     உள்சுற்றில் விநாயகர், இரட்டை நந்தி, இரு பலிபீடங்கள், அறுபத்து
மூவர், சந்தானசாரியார்கள், விநாயகர், முருகன், கஜலட்சுமி, தலமரம்,
ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும்
ஆகிய சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபத்தில் நவக்கிரகம், நடராச சபைகள்
உள்ளன. சுவாமி - சுயம்பு. மேற்புறம் பிருதிவிபாகம். புற்றுமண்ணாலாகியது.
புனுகு சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் ஆவுடையாருக்கே.
சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளது. சுவாமிக்கு
முல்லைமலர் (பூக்குங் காலத்தில்) சார்த்தப்படுகிறது. நல்ல உயரமான
திருமேனி நிறைவான தரிசனம்.

     இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர். கோயிலில்
சுவாமி சந்நிதி, அதன் இடப்பால் அம்பாள் சந்நிதி - மத்தியில் முருகன்
சந்நிதி என அமைந்து இது சோமாஸ்கந்த நிலையை நமக்கு நினைவூட்டுகிறது.
அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் கௌத மேசர் கோயிலுள்ளது.
இத்தலத்திற்கு (1) தலபுராணமும் (2) பதிற்றுப்பத்தாந்தாதியும்
(3) இரட்டைமணிமாலையும் (4) நான்மணி மாலையும் உள்ளன. கோயிலில்
திருமணங்கள், கருவளர்சிறப்பு முதலிய நற்சடங்குகள் நடைபெறுகின்றன.
சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம்
செய்து அந் நெய்யை யுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும்
மக்களிடையே இத்தலத்தில் உள்ளது. இதற்கெனக் கோயிலில், அர்ச்சனை
நெய்யைத் தபாலில் பெறவும் ஏற்பாடுள்ளது. கருவுற்ற பெண்களுக்குச்
சுகப்பிரசவம் உண்டாகும் பொருட்டு, ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகையின் திருவடியில்
வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும்
காலத்தில் இதை வயிற்றில் தடவி வர, சுகப்பிரசவமாகும். இதையும் அஞ்சல்
மூலம் பெறலாம்.

     குழந்தையில்லாத பெண்கள் நேரில் வந்து, அம்பாள் சந்நிதிப் படியை
சிறிது நெய்யால் மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்தால் விரைவில்
குழந்தைப் பேறு கிடைக்கும். கோயிலில் துலாபார பிரார்த்தனையுள்ளது.

     முதலாம் ராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்
கூற்றத்துத் திருக்கருகாவூர்” என்று தலம் குறிக்கப்படுகிறது. இவ்வூர்க்கு
அருகில் ஓடிய உட்பலாறு - உப்பலாறு என்று வழங்கியது. தற்போது
வெட்டாறு ஓடுகிறது.