திருமால், பிரமன், திசைப்பாலகர்கள் வசிட்டர், தேவர்கள் - வழிபட்ட தலம். பாண்டவர்களின் வனவாசகாலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது. தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம். பாலை வனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்கள் இத்தலத்திற்குண்டு. திருநல்லூரைச் சேர்ந்த சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. வேதங்களின் நடுவணதாகிய யஜு ர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51 ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள “விண்ணினார் பணிந்து” என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் இதுவேயாகும். “விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் மண்ணினார் மறவாது சிவாய என்று எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் அவர் பாலைத் துறையரே.” இறைவன் - பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர். இறைவி - தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை தவளாம்பாள் என வழங்குகின்றனர்.) தலமரம் - பாலை. இப்போது இல்லை. தீர்த்தம் - வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் முதலியன. அப்பர் பாடல் பெற்ற தலம். ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது. கோபுரவாயில் முகப்புத் தூண்களில் பிட்டுக்கு மண் சுமந்த வரலாறுகள் சிற்பங்களாக உள்ளன. ராஜகோபுரத்தில் சிற்பங்களில்லை. கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் |