பக்கம் எண் :

458 திருமுறைத்தலங்கள்


கட்டமைப்பிலும் காணப்படுகிறது. உள் நுழைந்தால் கொடிமரமில்லை.
வலப்பால் ஒரு பெரிய நெற்களஞ்சியம் - செங்கல்லால் கட்டப்பட்டது காட்சி
தருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம்
12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு அதிகமான நெல்
வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத்
தெரிகின்றது. இன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.

     உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வலமாக வரலாம் -
விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம்,
மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட இலிங்கங்கள்
ஆகியவை உள்ளன. அறுபத்துமூவர் மூலவத் திருமேனிகள் உள்ளன.
நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகளும் உள. மூலவர்
சந்நிதி கிழக்கு நோக்கியது. அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக, சுவாமிக்கு
வலப்பால் உள்ளது. அதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. நின்ற கோலம்.
பழைமையான கட்டமைப்பு உடையது.

     சுவாமி அம்பாள் இருவரும் கல்யாணக்கோலத்தில் விளங்குகின்றனர்.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி,
பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.
நான்குகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

     இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம்
இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன்
ஆகியோருடைய காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கல்வெட்டுக்களில்
இவ்வூர், “நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர்”
என்றெழுதப்பட்டுள்ளது. சுவாமி, ‘திருப்பாலைத்துறை மகாதேவர்” என்று
குறிப்பிடப்பட்டுள்ளார். முதற்குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கருங்கல்
திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் கருத்து.

     இத்தலத்திற்கு அருகில் உள்ள ‘பாவநாசத்தில்’ இருக்கும் ‘நூற்றெட்டுச்
சிவலிங்கக் கோயில்’ தரிசிக்கத் தக்கது. இது ‘கீழை ராமேஸ்வரம்’
எனப்படுவது. கர, தூஷணர்களைக் கொன்ற பாவம் தீர, இராமர் இத்தலத்தில்
108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பாவந்தீரப் பெற்றார்
என்பது வரலாறு. இதனாலேயே இத்தலம் பாவநாசம் எனப் பெயர் பெற்றது.
தனிமண்டபத்தில்