ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ளவும், வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு வீசினார். தேவர்கள் அஞ்சினர். ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்த ; தக்க சமயமென்றெண்ணி, வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் திருநல்லூரிலும், ஆவூரிலும் விடுத்தனன். அம்மலைச் சிகரமே நல்லூரில் இறைவன் எழுந்தருளியுள்ள மலையாகும். இச்சிகரத்திற்கு - மலைக்குச் ‘சுந்தரகிரி’ என்ற பெயர் ; தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது. திருச்சித்திமுற்றத்துச் சிவக்கொழுந்தீசரை வழிபட்டு, ‘கோவாய் முடுகி’ என்ற பதிகம் பாடி, தனக்குத் திருவடி தீட்சை செய்யுமாறு அப்பர் வேண்ட, அவரை இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளி, “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம், என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டி”யருளினார். இச் செய்தியை நம்பியாண்டார் நம்பிகளும் தாம் அருளியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியுள் “நற்றவன் நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்” எனக் குறித்துள்ளார். இதுபற்றியே இன்றும் இத்தலத்தில் சடாரி போன்று திருவடி சூட்டப் படுகின்றது. அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் அவருக்குக் காட்சி வழங்கி ஆட்கொண்டருளிய (முத்தியருளிய) அருட்சிறப்பும் உடையது இத்தலம். மிகப்பழமையான, அருமையான, சிறப்புமிக்க திருக்கோயில். இறைவன் - பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர். இறைவி - கிரிசுந்தரி, பர்வதசுந்தரி, கல்யாணசுந்தரி. தலமரம் - வில்வம் தீர்த்தம் - சப்தசாகர தீர்த்தம். கோயிலின் முன்னால் உள்ளது. படித்துறைகளையுடையது. குளக்கரையில் ஒருபுறம் அமர்நீதி நாயனார் மடாலயம் உள்ளது. சற்றுகிலமாகவுள்ளது. அக்குடும்ப வழிவந்தோர் அமர்நீதி நாயனார் விழாவை இம்மடத்தில் ஆண்டுதோறும் நடத்துகிறார்கள். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. ஐந்து நிலைகளையுடைய அழகான ராஜகோபுரம் நம்மை அழைக்கின்றது. உள்ளே விசாலமான இடம். கவசமிட்ட கொடிமரம் உள்ளது. முன்பு விநாயகர் உள்ளார். அடுத்து வடபால் வசந்த |