பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 461


மண்டபமும், தென்பால் அமர்நீதியார் துலையேறிய துலா மண்டபமும்
உள்ளன. இங்குள்ள அஷ்டபூஜ காளி பிரசித்தி பெற்றது.

    உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது - கீழே கல்கட்டிடம் மேலே
சுதை வேலைப்பாடுடையது. உள்ளே நுழைந்தால் நேரே காசி விநாயகர்
தரிசனம். வலம்வர, பாணலிங்கம், விசுவநாதர் சந்நிதிகள்.

     சோமாஸ்கந்தர் மண்டபமும், முருகன் சந்நிதியும் உள்ளன. வடபால்
அமர்நீதி நாயனார், மனைவி, குழந்தை, குந்திதேவி முதலியோரின்
உருவங்கள் உள்ளன. மாடக்கோயிலில் கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர்,
அடுத்து யோகத்தின் மேன்மையை விளக்கும் விநாயகரின் மற்றொரு உருவம்,
தக்ஷிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர்
திருவுருவங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. அழகான
நடராசசபை.

     மூலவர் - பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள
இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத
அற்புதமான அமைப்பை உடையது. ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை
- ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப்
பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் வழங்குகின்றது. பிருங்கி முனிவர், வண்டு
வடிவமாய் வழிபட்டதால் இச்சிவலிங்கத்தில் துறைகள் உள்ளன. சதுர
ஆவுடையார் சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக்
கோலங்காட்டி யருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதைவடிவில்
காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரமனும் காட்சி தர,
அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். மூலவருக்குப் பக்கத்தில்
அகத்தியலிங்கம் உள்ளது.

     மூலவர் - பஞ்சவர்ணேஸ்வரர் - சுயம்பு மூர்த்தி. இத்திருமேனி
முழுவதும் வண்டுகள் துளைத்த அடையாளங்கள் உள்ளன. மூலவர் பிராகார
வலம்வரக் குறுகலான வழியுள்ளது.

    கிழக்கு நோக்கிய சந்நிதி. மூலவர் - சிவலிங்கத் திருமேனி பார்ப்பதற்கு
ஓர் உலோகம் போலக் காட்சி தருகின்றது. (இக்குறிப்பை எழுதுவதற்காகச்
சென்று தரிசித்த போது சிவலிங்கம் பித்தளை வடிவமாகக் காட்சி தந்ததைக்
கண்ணாரக்கண்டு தரிசித்தேன்.)

     சந்நிதியில் பலகணி உள்ளது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வாயிலின்
பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதி. நின்ற
திருக்கோலம்.